ரஷியா-உக்ரைன் போர்: இந்திய வைரத் தொழிலை பாதிக்கும்?
வைரத் தொழில்துறையில் இந்தியா உலகளவில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.
கொல்கத்தா,
வைரத் தொழில்துறையில் இந்தியா உலகளவில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. உலகின் 90 சதவீத பட்டை தீட்டப்படாத வைரங்களை இந்தியா இறக்குமதி செய்து, பட்டை தீட்டி, மெருகேற்றுகிறது. அதில் பெரும்பாலானவை ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இந்நிலையில் ரஷியா-உக்ரைன் போரை தொடர்ந்து ரஷியா மீது அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் விதித்துள்ள பொருளாதார தடை, இந்திய வைரத் தொழிலை பாதிக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
காரணம், ரஷியாவின் மிகப்பெரிய வைரச் சுரங்க நிறுவனமான அல்ரோசாதான், உலகளவில் 30 சதவீத பட்டை தீட்டப்படாத வைரங்களை வினியோகம் செய்கிறது. இந்தியாவுக்கும் முக்கிய ஆதாரமாக திகழ்கிறது.
கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு தற்போதுதான் இந்திய வைரத் தொழில்துறை மீண்டு வருகிறது. நடப்பு நிதியாண்டில் ரூ.1.84 லட்சம் கோடி அளவுக்கு வருவாய் ஈட்ட இத்தொழில்துறை இலக்கு நிர்ணயித்திருந்தது. தற்போது அந்த இலக்கை எட்டுவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. ரஷியா மீதான பொருளாதார தடை, வைரத் தொழில்துறை வளர்ச்சியைப் பாதிக்கும் என்று ‘ரேட்டிங்’ அமைப்பான கிரிசில் தெரிவித்திருக்கிறது.
‘போர் தொடங்குவதற்கும், பொருளாதார தடை விதிக்கப்படுவதற்கும் முன்பே ரஷியாவின் அல்ரோசா நிறுவனத்துக்கு அடுத்த 2 மாதத்துக்கான ஆர்டர் கொடுக்கப்பட்டுவிட்டது.
எனவே, சில வங்கிகளுக்கு பணம் அனுப்புவதில் பிரச்சினை தவிர தற்போதைக்கு பெரிதாக தாக்கம் இல்லை. நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்’ என்று இந்திய ரத்தினங்கள் மற்றும் நகை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் செயல் இயக்குனர் சப்யாசாச்சி ராய் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story