உக்ரைன் விவகாரம்: எதிர்க்கட்சிகள் மீது மத்திய மந்திரி பியூஷ் கோயல் குற்றச்சாட்டு


உக்ரைன் விவகாரம்: எதிர்க்கட்சிகள் மீது மத்திய மந்திரி பியூஷ் கோயல் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 9 March 2022 6:20 PM IST (Updated: 9 March 2022 6:20 PM IST)
t-max-icont-min-icon

உக்ரைனில் இந்திய மாணவர்கள் சிக்கிய விவகாரத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சியினர் அரசியல் செய்ய முயன்றதாக மத்திய மந்திரி பியூஷ் கோயல் குற்றம் சாட்டியுள்ளார்.

புதுடெல்லி,

உக்ரைனில் ரஷியா தொடுத்துள்ள போரால் அங்கு சிக்கியுள்ள இந்திய மாணவர்களை மீட்டுக்கொண்டு வருவதற்காக மத்திய அரசு ‘ஆபரேஷன் கங்கா’ என்ற திட்டத்தை கையில் எடுத்து நிறைவேற்றி வருகிறது.

இந்த திட்டத்தின்கீழ் ஏர் இந்தியா விமானங்கள் மற்றும் போர் விமானங்கள் மூலம் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்கப்பட்டு தாய்நாடு வந்து சேர்ந்தனர்.

இந்த நிலையில் ஆப்ரேஷன் கங்கா குறித்து மத்திய மந்திரி பியூஷ் கோயல் கூறியதாவது:-

உக்ரைனில் இருந்து இந்தியர்களை வெளியேற்றுவதில் பல நாடுகள் தடுமாறின. ஆனால் இந்தியா இன்னும் தனது மக்களை அண்டை நாடுகள் மூலம் வெளியேற்றி வருகிறது. மக்கள் தங்கள் செல்லப்பிராணிகளையும் தங்களுடன் அழைத்து வருகின்றனர். நேபாளம், பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளின் மக்களையும் வெளியேற்றியுள்ளோம்.

உக்ரைனில் சிக்கித் தவிக்கும் 18.5 ஆயிரம் மாணவர்களின் குடும்பங்களை எங்கள் கட்சியின் தொண்டர்கள் அணுகினர். குடும்ப உறுப்பினர்களை சந்தித்து தங்களது குறைகளை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தனர்.

உக்ரைனில் இந்திய மாணவர்கள் சிக்கிய விவகாரத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சியினர் அரசியல் செய்ய முயன்றனர். மக்களுக்கு ஆறுதல் சொல்வதற்கு பதிலாக எதிர்க்கட்சி தலைவர்கள் தவறான பிரசாரத்தில் ஈடுபட்டனர். அதே நேரத்தில் உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களைப் பற்றி பிரதமர் மோடி தொடர்ந்து கவலைப்படுகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story