உக்ரைன் போர்: சுமி நகரில் இருந்து நாடு திரும்பும் 700 இந்தியர்கள்...!
உக்ரைன் போரில் சிக்கி தவித்த 700 இந்தியர்கள் சுமி நகரில் இருந்து மீட்கப்பட்டு இன்று நாடு திரும்புகின்றனர்.
புதுடெல்லி,
உக்ரைன் மீது ரஷியா 15 வது நாளாக போர் தொடுத்து வருகிறது. தலைநகர் கீவ் உட்பட நாட்டின் கிழக்கு மற்றும் மத்திய பிராந்தியங்களில் உள்ள நகரங்களில் ரஷிய விமானங்கள் இரவில் குண்டுவீசி தாக்குதல் நடத்தியது. இதுவரை பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 20 லட்சம் பொதுமக்கள் உக்ரைனில் இருந்து வெளியேறியுள்ளனர்.
உக்ரைன் நாட்டின் வடகிழக்கு பகுதியில் சுமி நகர் உள்ளது. அங்கு இந்தியா, வங்காளதேசம், நேபாளம் உள்பட பல நாடுகளை சேர்ந்த மாணவர்கள் தங்கி படித்து வருகிறார்கள். ரஷிய தாக்குதல் தொடங்கியதில் இருந்து அவர்கள் வெளியேற முடியாமல் தவித்து வந்தனர். கடந்த 7-ந்தேதி அவர்களை வெளியேற்ற நடந்த முயற்சி தோல்வி அடைந்தது.
இதற்கிடையே, 8-ந்தேதி சுமார் 700 இந்தியர்கள் 13 பஸ்கள் மூலம் செஞ்சிலுவை சங்கத்தின் பாதுகாப்புடன் உக்ரைனின் மேற்கு பகுதியில் உள்ள போல்டாவா நகருக்கு பத்திரமாக அழைத்து செல்லப்பட்டனர். சுமியில் இருந்து மீட்கப்பட்ட கடைசி மிகப்பெரிய இந்திய குழு இதுவே ஆகும்.
இந்தநிலையில், 700 இந்தியர்களும் நேற்று போல்டாவா நகரில் இருந்து லிவிவ் நகருக்கு சிறப்பு ரெயிலில் அனுப்பப்பட்டனர். மேற்கண்ட 2 நகரங்களுக்கு இடையிலான தூரம் 888 கி.மீ. ஆகும். ரெயிலில் 12 மணி நேரம் பயணிக்க வேண்டும்.
இதுகுறித்து, மாணவர்களை ஒருங்கிணைத்து அழைத்து செல்லும் பணியில் ஈடுபட்ட அன்ஷத் அலி கூறிகையில், “லிவிவ் நகர்வரை ரெயிலில் சென்றுவிட்டு அங்கிருந்து பஸ்கள் மூலம் 700 இந்தியர்களும் போலந்துக்கு அழைத்து செல்லப்படுவார்கள். அங்கிருந்து 10-ந்தேதி (இன்று) விமானங்கள் மூலம் இந்தியாவுக்கு அழைத்து செல்லப்படுவார்கள். சுமியில் இருந்து 95 சதவீத மாணவர்கள் வெளியேற்றப்பட்டு விட்டனர்”என்றார்.
Related Tags :
Next Story