5 மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்றப்போவது யார்? - வாக்கு எண்ணிக்கை தொடக்கம்


வாக்கு எண்ணும் மையம் (Image Courtesy: PTI)
x
வாக்கு எண்ணும் மையம் (Image Courtesy: PTI)
தினத்தந்தி 10 March 2022 8:00 AM IST (Updated: 10 March 2022 8:56 AM IST)
t-max-icont-min-icon

5 மாநில சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் தொடங்கியுள்ளது.

லக்னோ,

உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் தற்போது (காலை 8 மணி) தொடங்கியுள்ளது. 

இந்த 5 மாநிலங்களில் பஞ்சாப்பில் காங்கிரசும் எஞ்சிய 4 மாநிலங்களில் பாஜக ஆட்சியும் நடைபெற்று வரும் நிலையில் தற்போது வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.

உத்தரபிரதேசம்:

நாட்டின் பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் 403 தொகுதிகளை கொண்ட சட்டசபைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதில், சுமார் 60 சதவீத வாக்குகள் பதிவாகின. 

உத்தரபிரதேசத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் ஆட்சியை கைப்பற்ற சமாஜ்வாதி, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டன. இதனால், இந்த முறை ஆட்சியை கைப்பற்றப்போது யார்? என்பது குறித்த ஆவல் தேசிய அளவில் அதிகரித்துள்ளது.

உத்தரகாண்ட்:  

70 தொகுதிகளை கொண்ட உத்தரகாண்ட் சட்டசபைக்கு கடந்த மாதம் 14-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இங்கு, சுமார் 65 சதவீத வாக்குகள் பதிவாகின. இம்மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் ஆளும் பா.ஜ.க.வுக்கும், எதிர்க்கட்சியான காங்கிரசுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிகள் தொடங்கியுள்ள நிலையில் உத்தரகாண்டில் ஆட்சியை கைப்பற்றபோவது யார்? என்ற ஆவல் அதிகரித்துள்ளது.

பஞ்சாப்:

177 தொகுதிகளை கொண்ட பஞ்சாப் சட்டசபைக்கு கடந்த மாதம் 20-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில், 71.95 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்த மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது.

ஆனால், இந்த தேர்தலில் காங்கிரசுக்கு எதிராக முன்னாள் முதல்-மந்திரி கேப்டன் அமரிந்தர்சிங் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து களம் இறங்கினார். சிரோமணி அகாலிதளம், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது. அதேவேளை, பஞ்சாப்பில் ஆம் ஆம் ஆத்மி கட்சி பெரும் பலத்துடன் போட்டியிட்டது. 

மணிப்பூர்:

60 தொகுதிகளை கொண்ட மணிப்பூர் சட்டசபைக்கு இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் சுமார் 76 சதவீத வாக்குகள் பதிவாகின. இம்மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. 

தேர்தலில் பாஜக, காங்கிரஸ், தேசிய மக்கள் கட்சி ஆகியவை முக்கிய போட்டியாளர்களாக உள்ளன. இந்த தேர்தலில் பாஜக - காங்கிரஸ் இடையே பெரும் போட்டி நிலவி வருகிறது.

கோவா:

40 தொகுதிகளை கொண்ட கோவா சட்டசபைக்கு கடந்த மாதம் 14-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 79 சதவீத வாக்குகள் பதிவாகின.

இந்த மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் பாஜக மொத்தமுள்ள 40 தொகுதிகளிலும் வேட்பாளர்களை களம் இறக்கியது. இந்த மாநிலத்தில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் களமிறங்கியுள்ளன.

5 மாநிலங்களில் நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேர்தல் 2024-ல் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக இருக்கலாம் என்பதால் தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

தேர்தலுகு பிந்தைய கருத்துக்கணிப்புகள் ஒரு பார்வை:-

* உத்தரபிரதேசத்தில் பெரும்பாலான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள், மாநிலத்தில் மீண்டும் பா.ஜ.க. வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைக்கும் என தெரிவித்தன.

* உத்தரகாண்டில் ஆளும் பா.ஜ.க.வும், எதிர்க்கட்சியான காங்கிரசும் கடும் போட்டியில் இருப்பதாக பல்வேறு கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. ஆனாலும் பா.ஜ.க.வுக்கு கருத்துக்கணிப்புகள் ஆதரவாக அமைந்துள்ளன.

* பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்று பல்வேறு கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.

* மணிப்பூரில் பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக அமைந்துள்ளன.

* கோவாவில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு சட்டசபை அமையும், பா.ஜ.க.வை விட காங்கிரஸ் முன்னிலை பெறும் என்று கருத்துக்கணிப்புகள் தெரிவித்தன.

Next Story