5 மாநிலத் தேர்தலில் பின்னடைவு: செயற்குழுக் கூட்டத்தைக் கூட்ட சோனியாகாந்தி முடிவு
5 மாநிலத் தேர்தல் முடிவுகள் குறித்து ஆராய காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தைக் கூட்ட கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி முடிவு செய்துள்ளதாக தலைமை செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜ்வாலா தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகண்ட், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
உத்தரப் பிரதேசத்தில் தொடர்ந்து இரண்டாவது முறையாக பாஜக ஆட்சியைப் பிடிக்கிறது. பஞ்சாபில் ஆட்சியிலிருந்த காங்கிரஸ் தோல்வியைச் சந்திக்கிறது. ஆம் ஆத்மி ஆட்சியை கைப்பற்றி உள்ளது.
இதுதவிர உத்தரகண்ட், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களிலும் காங்கிரஸ் பின்னடைவையே சந்தித்துள்ளது.
இந்த நிலையில், டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த ரன்தீப் சுர்ஜ்வாலா கூறியதாவது:
"5 மாநிலத் தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் எதிர்பார்ப்புக்கு நேர்மாறாக அமைந்துள்ளது. ஆனால், மக்கள் ஆசியைப் பெறத் தவறிவிட்டோம் என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். தேர்தல் முடிவுகள் குறித்து ஆராய காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தைக் கூட்ட சோனியா காந்தி முடிவு செய்துள்ளார்.
பஞ்சாபில், மண்ணின் மகனான சரண்ஜித் சிங் சன்னி மூலம் காங்கிரஸ் புதிய தலைமையை முன்வைத்தது, ஆனால், கேப்டன் அமரீந்தர் சிங்கின் கீழ் 4.5 ஆண்டுகால ஆட்சிக்கு எதிரான ஆட்சியை முறியடிக்க முடியவில்லை, எனவே மக்கள் மாற்றத்திற்காக ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களித்தனர் என்றார்.
Related Tags :
Next Story