தென்கொரிய அதிபர் தேர்தலில் யூன் சுக்-யோல் வெற்றி - பிரதமர் மோடி வாழ்த்து


தென்கொரிய அதிபர் தேர்தலில் யூன் சுக்-யோல் வெற்றி - பிரதமர் மோடி வாழ்த்து
x
தினத்தந்தி 10 March 2022 11:05 PM IST (Updated: 10 March 2022 11:05 PM IST)
t-max-icont-min-icon

தென்கொரிய அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற யூன் சுக்-யோலுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சியோல்,

தென் கொரியா நாட்டில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளும் ஜனநாயக கட்சி வேட்பாளர் லீ ஜே மியுங்குக்கும், மக்கள் சக்தி கட்சியை சேர்ந்த யூன் சுக்கிற்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

இத்தேர்தலில் மொத்தம் 14 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிட்டனர். சுமார் 4 கோடியே 40 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கும் தகுதியைப் பெற்றிருந்தனர். வாக்குப்பதிவு முடிவடைந்ததும் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. இதனைத்தொடர்ந்து, மக்கள் சக்தி கட்சியைச் சேர்ந்த யூன் சுக் 48.59 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார் என அந்நாட்டு தேர்தல் ஆணையம் தெரிவித்தது. கடும் போட்டியாக விளங்கிய ஜனநாயக கட்சி வேட்பாளர் லீ ஜே மியுங் 47.80 சதவீதம் வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். 

இந்நிலையில் தென்கொரிய தேர்தலில் வெற்றி பெற்று அந்நாட்டு அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட யூன் சுக்-யோலுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “தென்கொரிய தேர்தலில் வெற்றி பெற்றதற்காக அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட யூன் சுக்-யோலை மனதார வாழ்த்துகிறேன். இந்தியா-கொரிய குடியரசின் சிறப்பு வியூகக் கூட்டாண்மையை மேலும் விரிவுபடுத்தவும், வலுப்படுத்தவும் அவருடன் இணைந்து பணியாற்றுவதை நான் எதிர்நோக்குகிறேன்” என்று அதில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார். 

Next Story