காதலனை கட்டிப்போட்டு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர் கைது...!
காதலனை கட்டிப்போட்டு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருப்பதி,
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் மசூலிப்பட்டினத்தைச் சேர்ந்தவர் 18 வயது கல்லூரி மாணவி. அங்குள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். அதே கல்லூரியில் 22 வயது வாலிபர் படித்து வருகிறார். இருவரும் காதலித்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று மாலை இருவரும் அங்கு உள்ள கடற்கரைக்கு சென்று ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் தனியாக பேசிக் கொண்டு இருந்தனர்.
அப்போது 2 வாலிபர்கள் மதுபோதையில் கடற் கரைக்கு வந்தனர். காதலர்கள் 2 பேரும் ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் பேசிக் கொண்டிருப்பதைக் கண்டனர்.
மதுபோதையில் காதலர்களிடம் சென்ற வாலிபர்கள் அவர்களிடம் தகராறில் ஈடுபட்டனர். அப்போது திடீரென மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றனர்.
இதனை கண்ட மாணவன் அவர்களிடமிருந்து காதலியை மீட்க போராடினார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் மாணவனின் கை கால்களை கட்டிப் போட்டனர். பின்னர் மாணவியை தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து உள்ளனர்.
மாணவி இதுகுறித்து செல்போன் மூலம் தனது தம்பிக்கு தகவல் தெரிவித்தார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் தம்பி அலறி அடித்துக்கொண்டு கடற்கரைக்கு வந்தார். அங்கு கை கால்கள் கட்டப்பட்டு இருந்த மாணவரையும், அக்காவையும் மீட்டு அங்குள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார்.
இதுகுறித்து மசூலிப்பட்டினம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவி கொடுத்த அங்க அடையாளங்களை வைத்து நாகபாபு (வயது 24) என்ற வாலிபரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மற்றொரு வாலிபரை தேடி வருகின்றனர்.
கடற்கரையில் தனியாக இருந்த கல்லூரி மாணவனை கட்டிப்போட்டு அவருடைய காதலியை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story