பாகிஸ்தானில் ஏவுகணை தரையிறங்கியதற்கு வருத்தம் தெரிவித்த இந்தியா...!


பாகிஸ்தானில் ஏவுகணை தரையிறங்கியதற்கு வருத்தம் தெரிவித்த இந்தியா...!
x
தினத்தந்தி 11 March 2022 11:26 PM IST (Updated: 11 March 2022 11:26 PM IST)
t-max-icont-min-icon

பாகிஸ்தானில் ஏவுகணை தரையிறங்கியதற்கு இந்திய பாதுகாப்பு அமைச்சகம் வருத்தம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் இருந்து பரிசோதனைக்காக ஏவப்பட்ட சூப்பர்சோனிக் ஏவுகணை ஒன்று கடந்த மார்ச் மாதம் 9 ஆம் தேதி பாகிஸ்தான் எல்லைக்குள் விழுந்த விவகாரம் பதற்றத்தை ஏற்படுத்தியது. கடந்த 9ம் தேதி அரியானா மாநிலம் சிர்சா பகுதியில் இருந்து ஏவப்பட்ட அதிவேக ஏவுகணை பாகிஸ்தான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து, மியா சானு என்ற பகுதியில் விழுந்திருப்பதாகவும், ஆய்வில் அது சூப்பர் சோனிக் வகை ஏவுகணை என்று தெரியவந்துள்ளதாகவும் பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்தது.

ஏவுகணை விழுந்ததால் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றும், தனியார் சொத்துக்கள் சில சேதமாகியுள்ளதாகவும் கூறி பாகிஸ்தான் அரசு கண்டனம் தெரிவித்தது. 

இந்த நிலையில்,  பாகிஸ்தானில் ஏவுகணை தரையிறங்கியதற்கு இந்திய பாதுகாப்புத்துறை விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், 

‘மார்ச் 9-ஆம் தேதியன்று வழக்கமான பராமரிப்பின்போது, தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏவுகணை ஒன்று பாகிஸ்தான் மண்ணில் தரையிறங்கி விட்டது. இந்திய அரசு இதைத் தீவிரமாகக் கொண்டு உயர்நிலை விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறது. நடந்த சம்பவத்துக்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம். அந்த விபத்தில் நல்ல வேளையாக உயிர் சேதம் ஏதும் ஏற்படாதது நிம்மதியளிக்கிறது’ என்று கூறப்பட்டுள்ளது.

Next Story