ஐ.ஆர்.சி.டி.சி.யிடம் இருந்து பொறுப்பை ஏற்று ரெயில் நிலையங்களில் 150 உணவுக்கூடங்களை அமைக்கிறது ரெயில்வே


ஐ.ஆர்.சி.டி.சி.யிடம் இருந்து பொறுப்பை ஏற்று ரெயில் நிலையங்களில் 150 உணவுக்கூடங்களை அமைக்கிறது ரெயில்வே
x
தினத்தந்தி 13 March 2022 12:35 AM IST (Updated: 13 March 2022 12:35 AM IST)
t-max-icont-min-icon

இந்திய ரெயில்வே சுற்றுலா மற்றும் உணவுக் கழகத்திடம் (ஐ.ஆர்.சி.டி.சி.) இருந்து பொறுப்பை ஏற்று, ரெயில் நிலையங்களில் சுமார் 150 உணவுக்கூடங்களை அமைக்க ரெயில்வே முடிவு செய்துள்ளது.

வருவாய் இழப்பு, வசதிக்குறைவு

ரெயில்களை இயக்கும் பிரதான பணியை மட்டும் கவனிக்கும் வகையில், ரெயில்களிலும், ரெயில் நிலையங்களிலும் உணவு வழங்கும் பொறுப்பை மேற்கொள்ள இந்திய ரெயில்வே சுற்றுலா மற்றும் உணவுக் கழகத்தை (ஐ.ஆர்.சி.டி.சி.) ரெயில்வே துறை உருவாக்கியது.

ஆனால் பல ரெயில் நிலையங்களில் உணவகங்களை அமைக்க ஐ.ஆர்.சி.டி.சி. தவறியதால், ரெயில்வே துறைக்கு பெரும் வருவாய் இழப்பும், பயணிகளுக்கு வசதிக்குறைவும் ஏற்படுவதாக கருதப்படுகிறது. எனவே உணவு வழங்கும் பொறுப்பை மண்டல ரெயில்வே துறைகளிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மண்டல ரெயில்வேக்களுக்கு அனுமதி

இதுதொடர்பான உத்தரவை கடந்த 8-ந் தேதி வௌியிட்ட ரெயில்வே வாரியம், ரெயில் நிலையங்களில் காலியாக உள்ள இடங்களில் உணவுக்கூடங்களை (புட் பிளாசாக்கள்) ஏற்படுத்த 17 மண்டல ரெயில்வேக்களுக்கு அனுமதி அளித்துள்ளது. இது தொடர்பான உத்தரவில், ரெயில் நிலையங்களில் உணவகங்கள் அமைக்க ஐ.ஆர்.சி.டி.சி.க்கு வழங்கப்பட்ட பல இடங்கள் காலியாக உள்ளதால், அந்த இடங்களில் உணவுக்கூடங்கள், துரித உணவு பிரிவுகள், பலவகையான சமையல் உணவகங்கள் போன்றவற்றை அமைக்க மண்டல ரெயில்வேக்களிடம் இருந்து வேண்டுகோள் பெறப்பட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

150 உணவுக்கூடங்கள்

அதன்படி, மண்டல ரெயில்வேக்களால் 150 உணவுக்கூடங்கள் வரை அமைக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த நடவடிக்கைக்கு ஏற்ப ரெயில்வேயின் 2017-ம் ஆண்டு உணவு வழங்கல் கொள்கையிலும் மாற்றம் செய்யப்பட்டு வருவதாக தெரிகிறது.

ரெயில் நிலையங்களில் உணவகங்களுக்காக ஒதுக்கப்பட்டு ஓராண்டு அல்லது அதற்கு மேலாக காலியாக உள்ள இடங்களை மண்டல பொது மேலாளர்கள் ஆய்வு செய்வார்கள்.

9 ஆண்டுகால ஒப்பந்தம்

அந்த இடங்கள் ஐ.ஆர்.சி.டி.சி.யிடம் இருந்து உரிய முறையில் பெறப்படும். அப்போது, ஏற்கனவே ஒப்பந்தங்கள் ஏதும் நடப்பில் இருந்தால் அது கவனத்தில் கொள்ளப்படும். ஐ.ஆர்.சி.டி.சி.யிடம் இருந்து பெறப்படும் இடங்களில் உணவுக்கூடங்கள் உள்ளிட்டவற்றை அமைக்க 9 ஆண்டுகாலத்துக்கு ஒப்பந்தம் மேற்கொள்ளும் வகையில் திறந்த ஒப்பந்த நடைமுறை கடைப்பிடிக்கப்படும்.

இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story