கர்நாடக பா.ஜனதா மாநில தலைவரை மாற்ற மேலிடம் முடிவு?
கர்நாடக மாநில பா.ஜனதா தலைவர் நளின்குமார் கட்டீலை மாற்றிவிட்டு புதிய தலைவரை நியமிக்க பா.ஜனதா மேலிடம் முடிவு செய்துள்ளது. இதனால் தலைவர் பதவிக்கு, பா.ஜனதா தலைவர்கள் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
நளின்குமார் கட்டீலை மாற்ற...
அடுத்த ஆண்டு(2023) நடைபெற உள்ள கர்நாடக சட்டசபை தோ்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க பா.ஜனதா திட்டமிட்டுள்ளது. இதற்காக இப்போதில் இருந்தே தேர்தல் பணிகளையும், கட்சியை வளர்க்கும் பணிகளிலும் பா.ஜனதா தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், சட்டசபை தேர்தலை எதிர்கொள்வதற்காக மாநில தலைவர் நளின்குமார் கட்டீல் மற்றும் முக்கிய நிர்வாகிகளை மாற்றிவிட்டு, புதியவர்களை நியமிக்க பா.ஜனதா மேலிடம் முடிவு செய்திருக்கிறது. இதையடுத்து, மாநில தலைவர் பதவியை கைப்பற்ற கர்நாடக பா.ஜனதா தலைவர்களிடையே கடும் போட்டி உருவாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
சி.டி.ரவிக்கு வாய்ப்பு
அதாவது பா.ஜனதா தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி, மத்திய மந்திரி ஷோபா, மந்திரிகள் ஈசுவரப்பா, சுனில்குமார், முன்னாள் மந்திரி அரவிந்த் லிம்பாவளி ஆகியோர் இடையே தான் போட்டி நிலவுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இவர்களில் சி.டி.ரவிக்கு தலைவர் பதவி கிடைக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இருந்து வந்ததுடன், இந்துத்துவா கொள்கையில் தீவிரமாக இருப்பதால், அவர் மாநில தலைவராக நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
அதே நேரத்தில் மத்திய மந்திரியான ஷோபாவுக்கு மாநில தலைவர் பதவி கிடைக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதே நேரத்தில் ஈசுவரப்பா மாநில தலைவர் பதவிக்கான போட்டியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுபோன்று, மந்திரி சுனில்குமார், அரவிந்த் லிம்பாவளியும் தலைவர் பதவிக்கான போட்டியில் இருக்கிறார்கள்.
அதே நேரத்தில் லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்த எடியூரப்பாவிடம் இருந்து முதல்-மந்திரி பதவி பறிக்கப்பட்டதால், அதன்பிறகு நடந்த இடைத்தேர்தலில் பா.ஜனதா தோல்வி அடைந்திருந்தது. லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்த பசவராஜ் பொம்மை முதல்-மந்திரியாக இருந்தாலும், 2023-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தோ்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதற்காக சாதி, வலிமையான தலைவர் உள்ளிட்டவற்றை ஆராய்ந்து புதிய மாநில தலைவரை நியமிக்க பா.ஜனதா மேலிட தலைவர்கள் ஆலோசித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story