மக்கள் தொகை கணக்கெடுப்பு: பொதுமக்களே பதிவு செய்யும் வகையில் விதிமுறைகள் மாற்றம்


மக்கள் தொகை கணக்கெடுப்பு: பொதுமக்களே பதிவு செய்யும் வகையில் விதிமுறைகள் மாற்றம்
x
தினத்தந்தி 13 March 2022 6:01 AM IST (Updated: 13 March 2022 6:01 AM IST)
t-max-icont-min-icon

மக்கள் தாங்களாகவே ஆன்லைனில் சுயமாக பதிவு செய்துகொள்வதற்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

நமது நாட்டில் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை சென்சஸ் என்று அழைக்கப்படுகிற மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடக்க இருந்தது. ஆனால் இது கொரோனாவால் தள்ளிப்போயிற்று. இந்த ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடக்க உள்ளது.

இந்த தருணத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு (திருத்தம்) விதிகள், 2022 மூலமாக ஒரு மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிக்கை நேற்று முன்தினம் வெளியானது. இதன்படி மக்கள் தாங்களாகவே ஆன்லைனில் சுயமாக பதிவு செய்துகொள்வதற்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதில் மின்னணு வடிவம் என்ற வார்த்தைகள், தகவல் தொழில்நுட்பச்சட்டம் 2000 பிரிவு 2 துணைப்பிரிவு (1)-ன் உட்பிரிவு (ஆர்) வழங்கப்பட்ட அதே பொருளைக் கொண்டிருக்கும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் இதன்படி பொதுமக்கள், மக்கள் தொகை கணக்கெடுப்பு பற்றிய தங்களின் விவரங்களை தாமாகவே முன்வந்து ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம். அதைத் தொடர்ந்து மக்கள் தொகை கணக்கெடுப்பாளர்கள் கடந்த காலத்தைப்போலவே உங்கள் வீடுகளுக்கும் வருவது தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான புதிய மாற்றங்கள்:-

* சுய கணக்கெடுப்பு என்பது மக்கள் தொகை கணக்கெடுப்பு அட்டவணையை சுயமாக பூர்த்தி செய்து, சமர்ப்பிப்பதாகும்.

* காந்த ஊடக வெளியீடுகள் மூலம் மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்களை வெளியிடுவது தொடர்பான விதி எண் 5-ல் ஊடகம் என்ற வார்த்தை மின்னணு அல்லது வேறு ஏதேனும் ஊடகம் என மாற்றப்பட்டுள்ளது.

* மக்கள் தொகை கணக்கெடுப்பு அட்டவணையை சுய கணக்கீடு மூலம் நிரப்ப அனுமதிக்கும் விதி 6-ல் ஒரு பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது.

* பாரபட்சம் இல்லாமல் ஒரு நபர் மக்கள் தொகை கணக்கெடுப்பு அட்டவணையை நிரப்பி பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளுக்கு 10 இயக்குனர்களை மத்திய உள்துறை அமைச்சகம் நியமித்துள்ளது. அதே நேரத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு எப்போது தொடங்கும் என்பது குறித்து அறிவிக்கப்படவில்லை.

Next Story