உத்தரகாண்ட் முதல்-மந்திரி பதவி யாருக்கு? - பா.ஜ.க.வில் கடும் போட்டி
உத்தரகாண்ட் மாநிலத்தில் முதல்-மந்திரி பதவியை பிடிக்க பா.ஜ.க.வில் கடும் போட்டி நிலவுகிறது.
டேராடூன்,
உத்தரகாண்ட் மாநில சட்டசபைக்கு நடந்த தேர்தலில் மொத்தம் உள்ள 70 இடங்களில் 47 இடங்களில் வென்று பா.ஜ.க. ஆட்சியைத் தக்க வைத்தது. அதே நேரத்தில் அந்தக் கட்சியின் முதல்-மந்திரி புஷ்கர்சிங் தமி, காதிமா தொகுதியில் அதிர்ச்சி தோல்வியைத் தழுவினார்.
இதனால் அங்கு முதல்-மந்திரி பதவியைப் பிடிக்க பா.ஜ.க.வில் கடும் போட்டி உருவாகி வருகிறது.
குறைந்தபட்சம் 6 பேர் போட்டியில் உள்ளதாக பா.ஜ.க. வட்டாரங்கள் தெரிவித்தன. புதிய எம்.எல்.ஏ.க்களில் சத்பால் மகாராஜ் (சவுபட்டக்கல்), தன்சிங் ராவத் (ஸ்ரீநகர் கர்வால்), பிஷன்சிங் சூபல் (திதிஹாட்) ஆகியோர் முதல்-மந்திரி போட்டி களத்தில் உள்ளனர்.
இந்த தேர்தலில் போட்டியிடாத முன்னாள் முதல்-மந்திரி திரிவேந்திரசிங் ராவத்தும் இப்போது முதல்-மந்திரி நாற்காலியைப்பிடிக்க விரும்புகிறார் என சொல்லப்படுகிறது.
முன்னாள் மத்திய மந்திரி ரமேஷ் பொக்ரியால் நிஷாங், ராணுவத்துறை ராஜாங்க மந்திரி அஜய் பட், மாநிலங்களவை எம்.பி. அனில் பலூனி ஆகியோரும் முதல்-மந்திரி பதவிக்கு குறி வைத்துள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுபற்றி மாநில பா.ஜ.க. தலைவர் மதன் கவுசிக் கருத்து தெரிவித்தபோது, ‘‘புதிய அரசு அமைப்பது பற்றி கட்சி மேலிடத்தில் இருந்து எந்த அறிவுறுத்தல்களும் வரவில்லை. நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லப்படுகிறதோ அதைச் செய்வோம்" என குறிப்பிட்டார். உத்தரகாண்டில் கட்சி ஜெயிப்பதற்கு முதல்-மந்திரி புஷ்கர் சிங் தமியின் இளம் மற்றும் ஆற்றல் மிக்க தலைமையே காரணம் என்று மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி கூறி இருக்கிறார்.
எனவே அவரையே மீண்டும் முதல்-மந்திரி பதவியில் அமர்த்த வேண்டும் என்று பா.ஜ.க.வில் ஒரு தரப்பில் குரல் எழுந்துள்ளது.
இவருக்கு சம்பவத் தொகுதி எம்.எல்.ஏ. கைலாஷ் கெஹ்டோரி, தனது தொகுதியை விட்டுக்கொடுக்க தயாராக இருப்பதாக தெரிவித்தார். இதே போன்று முன்னாள் முதல்-மந்திரி திரிவேந்திர சிங் ராவத்துக்கு ஆதரவாக டோய்வாலா தொகுதியில் வெற்றி பெற்ற பிரிஜ் பூஷண் தனது பதவியை ராஜினாமா செய்ய முன் வந்துள்ளார்.
இப்படி உத்தரகாண்ட் மாநில முதல்-மந்திரி பதவிக்கு பா.ஜ.க.வில் கடும் போட்டி நிலவினாலும், பிரதமர் மோடியின் கடைக்கண் பார்வை யார் மீது விழுகிறதோ அவருக்கே வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
Related Tags :
Next Story