டெல்லி: காங்கிரஸ் கட்சி தலைவராக ராகுல் காந்தியை நியமிக்க கோரி நிர்வாகிகள், தொண்டர்கள் முழக்கம்
டெல்லியில் காங்கிரஸ் கட்சி தலைவராக ராகுல் காந்தியை நியமிக்க கோரி நிர்வாகிகள், தொண்டர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
புதுடெல்லி,
சமீபத்தில் நடந்து முடிந்த உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல்களில் பஞ்சாப்பை ஆம் ஆத்மியும், மீதமுள்ள 4 மாநிலங்களை பா.ஜனதாவும் கைப்பற்றின. ஆனால் இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய 4 மாநிலங்களில் ஆட்சியை பிடிக்க முடியாததுடன், தன் வசம் வைத்திருந்த பஞ்சாப்பையும் இழந்து விட்டது.
இது காங்கிரஸ் தொண்டர்கள் மட்டுமின்றி முன்னணி தலைவர்களுக்கும் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் கட்சித்தலைமை மீது விமர்சனங்களை வீசத்தொடங்கி உள்ளனர்.
இவ்வாறு தேர்தல் தோல்வி தொடர்பாக காங்கிரஸ் கட்சியினரிடையே அதிருப்தியும், விரக்தியும் அதிகரித்து வரும் நிலையில் கட்சியின் அதிகாரம் மக்க அமைப்பான காரியக்கமிட்டி கூட்டம் இன்று தொடங்கியது; இந்த கூட்டத்தை கட்சியின் தலைவர் சோனியா தலைமை தாங்கி வருகிறார். . இந்த கூட்டத்தில் காரியக்கமிட்டி உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த கூட்டத்தில் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இதில் முக்கியமாக சமீபத்தில் நடந்த 5 மாநில தேர்தலில் கட்சி அடைந்துள்ள மோசமான தோல்வி குறித்து விரிவாக விவாதிக்கப்படுகிறது.
இந்த நிலையில், காரியக்கமிட்டி கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், காங்கிரஸ் கட்சி தலைவராக ராகுல் காந்தியை நியமிக்க கோரி நிர்வாகிகள், தொண்டர்கள் முழக்கங்களை எழுப்பினர். காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் ஏராளமானோர் குவிந்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story