தேசிய பங்கு சந்தை முறைகேடு: முன்னாள் தலைமை செயல் அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்
தேசிய பங்கு சந்தை முறைகேடு வழக்கில் முன்னாள் தலைமை செயல் அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
தேசிய பங்கு சந்தையின் (என்.எஸ்.சி) தலைமை செயல் அதிகாரியாக கடந்த 2013ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை சித்ரா ராமகிருஷ்ணா பணியாற்றினார். அப்போது பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக, இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி) குற்றம் சாட்டியது.
மேலும், அவர் முன் அனுபவம் இல்லாத ஆனந்த் சுப்பிரமணியம் என்பவரை தனது ஆலோசகராகவும், என்.எஸ்.சி.யின் தலைமை வியூக அதிகாரியாக நியமித்ததுடன், பிற சலுகைகள் வழங்கியதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டது.
இந்த சூழலில், மும்பையில் உள்ள சித்ரா ராமகிருஷ்ணா வீடு உட்பட அவருக்கு தொடர்புடைய அலுவலகங்களில் மும்பை வருமான வரி புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள் கடந்த மாதம் சோதனை நடத்தினர். இதேபோல் ஆனந்த் சுப்பிரமணியத்திற்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடந்தது.
அதேபோல், தேசிய பங்கு சந்தையின் நிதி மற்றும் வணிக திட்டங்கள், ஈவுத்தொகை காட்சிகள் மற்றும் நிதி முடிவுகள் உள்ளிட்ட சில உள் ரகசிய தகவல்களை தன்னை வழி நடத்தும் இமயமலையில் உள்ள ஒரு யோகியுடன், சித்ரா ராமகிருஷ்ணா பகிர்ந்து கொண்டதாகவும், பரிமாற்றத்தின் ஊழியர்களின் செயல்திறன் மதிப்பீடுகள் குறித்தும் அவரிடம் கலந்தாலோசித்ததாகவும் கூறப்பட்டு உள்ளது. இது தொடர்பாகவும் விசாரணை நடந்து வந்தது.
இதனைத்தொடர்ந்து தேசிய பங்கு சந்தை விவரங்களை கசியவிட்டதாக எழுந்த குற்றச்சாட்டு காரணமாக சித்ரா ராமகிருஷ்ணா, ஆனந்த் சுப்பிரமணியம் ஆகியோருக்கு எதிராக மத்திய புலனாய்வு பிரிவு (சி.பி.ஐ.) கடந்த மாதம் 18ந்தேதி லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியது.
மும்பையில் விசாரணை நடத்த தொடங்கிய சி.பி.ஐ., இமயமலை யோகி, சித்ரா ராமகிருஷ்ணா இடையேயான பல்வேறு மின்னஞ்சல்களை ஆய்வு செய்தது.
இதன் தொடர்ச்சியாக தேசிய பங்கு சந்தை முறைகேடு வழக்கில் ஆனந்த் சுப்பிரமணியத்தை சிபிஐ அதிகாரிகள் கடந்த மாதம் 25-ம் தேதி கைது செய்தனர்.
அதனை தொடர்ந்து கடந்த 6-ம் தேதி தேசிய பங்கு சந்தை முறைகேடு வழக்கில் முன்னாள் தலைமை செயல் அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணாவையும் சிபிஐ கைது செய்தது. கைது செய்யப்பட்ட சித்ரா ராமகிருஷ்ணா 7 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார்.
சிபிஐ விசாரணையின் போது இமயமலை யோகியாக சித்ரா ராமகிஷ்ணாவுக்கு இமெயில்களை அனுப்பியது அவரது ஆலோசகரான ஆனந்த் சுப்ரமணியம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியானது. அவர் தனது முடிவுகளை சித்ரா ராமகிஷ்ணா வாயிலாக செயல்படுத்தியுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், 7 நாள் நீதிமன்ற காவல் நிறைவடைந்ததையடுத்து, காவலை மேலும் நீட்டிக்க வேண்டும் என சிபிஐ தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை இன்று விசாரித்த டெல்லி கோர்ட்டு, தேசிய பங்குச்சந்தையின் ரகசிய தகவல்களை கசியவிட்டதாக பதிவான வழக்கில் சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு மேலும் 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து சித்ரா ராமகிருஷ்ணா சிறையில் அடைக்கப்பட்டார்.
Related Tags :
Next Story