நாடு தழுவிய அளவில் தேசிய குடிமக்கள் பதிவேடு எப்போது அமல்? - மத்திய அரசு பதில்
நாடு தழுவிய அளவில் தேசிய குடிமக்கள் பதிவேட்டை அமல்படுத்துவது எப்போது? என்ற கேள்விக்கு நாடாளுமன்றத்தில் மத்திய அரசு பதில் அளித்துள்ளது.
புதுடெல்லி,
வங்காளதேசம் உள்ளிட்ட அண்டை நாடுகளை சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாக அசாமிற்குள் குடியேறுவதை தடுக்கும் வகையில் அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேடு அமல்படுத்தப்பட்டது. வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக அசாமில் குடியிருப்பவர்களை கண்டறியும் வகையில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 31-ம் தேதி அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேட்டின் இறுதி பட்டியல் வெளியானது. இதில் லட்சக்கணக்கான மக்களின் பெயர்கள் விடுபட்டிருந்தது. இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தேசிய குடிமக்கள் பதிவேட்டு முறை அசாமில் தற்போதும் அமலில் உள்ளது.
இதற்கிடையில், அசாமை போன்றே நாடு தழுவிய அளவில் தேசிய குடிமக்கள் பதிவேட்டு கணக்கெடுப்பை மேற்கொள்ள கடந்த 2020-ம் ஆண்டு மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால், போராட்டம் போன்ற பல்வேறு காரணங்களுக்காக இந்த கணக்கெடுப்பு பணிகள் இதுவரை தொடங்கப்படவில்லை.
இந்நிலையில், நாடு தழுவிய அளவில் தேசிய குடிமக்கள் பதிவேட்டை அமல்படுத்துவதில் தற்போது எந்த நிலையில் உள்ளது என நாடாளுமன்றத்தில் மக்களவையில் உறுப்பினர் கேள்வி எழுப்பினார். அந்த கேள்விக்கு மத்திய அரசு எழுத்துப்பூர்வ பதில் அளித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்த் ராய் அளித்துள்ள பதிலில், தேசிய குடிமக்கள் பதிவேட்டை நாடு தழுவிய அளவில் தயாரிக்க மத்திய அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story