மின் வாகன தயாரிப்பாளர்கள், விலையை குறைக்க வேண்டும் - மத்திய மந்திரி பியூஷ் கோயல்
மின் வாகன தயாரிப்பாளர்கள், விலையை குறைக்க வேண்டும் என்று மத்திய மந்திரி பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
மும்பை,
காணொலி வாயிலாக நடைபெற்ற மின் வாகன மாநாட்டில் மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை மந்திரி பியூஷ் கோயல் பேசினார். அப்போது அவர் கூறுகையில்,
‘இந்தியாவில் மின் வாகனத்துறையின் வளர்ச்சிக்கு, நாம் உலகளவில் போட்டியிடும் திறனைப் பெற வேண்டும். அதற்கு மின் வாகனங்களின் விலையை தயாரிப்பாளர்கள் குறைக்க வேண்டும்.
இந்தியாவில் வந்து உற்பத்தி செய்வதற்கும், தொழில்நுட்ப பரிமாற்றத்துக்கும் பிறநாட்டவர்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டும். சர்வதேச மின் வாகன சந்தையில் நாம் பிரதான இடத்தைப் பெற வேண்டும்.
முரண்பட்ட காலநிலை, நமது சாலைகள் என்று இந்திய சூழ்நிலைகளுக்கு ஏற்ப உள்நாட்டு தொழில்நுட்பத்தின் அடிப்படையில் நிலையான தீர்வுகளை நம் மின் வாகன தயாரிப்பாளர்கள் உருவாக்க வேண்டும். மின் வாகனத்துறை வளர்ச்சிக்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில் ‘பேம் 2’ திட்டத்துக்கு ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் சுமார் 92 ஆயிரம் மின் வாகனங்கள், 6 ஆயிரம் மின் பஸ்கள் தயாரிப்பு, 3 ஆயிரம் மின் வாகன சார்ஜிங் நிலையங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.’ இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story