ஹிஜாப் வழக்கில் மேல் முறையீடு: ஹோலி விடுமுறைக்கு பின் விசாரணை- சுப்ரீம் கோர்ட்


ஹிஜாப் வழக்கில் மேல் முறையீடு: ஹோலி விடுமுறைக்கு பின் விசாரணை- சுப்ரீம் கோர்ட்
x
தினத்தந்தி 16 March 2022 11:34 AM IST (Updated: 16 March 2022 11:34 AM IST)
t-max-icont-min-icon

பள்ளி-கல்லூரிகளில் ஹிஜாப் அணிய தடை விதித்து கர்நாடக அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று கூறி கர்நாடக ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு கூறியது.

புதுடெல்லி,

கல்வி நிறுவனங்களில் ‘ஹிஜாப்’ அணிவதற்கான தடை செல்லும் என்று கர்நாடக ஐகோர்ட்டு நேற்று அதிரடியாக தீர்ப்பு அளித்தது. உடனடியாக இந்த தீர்ப்பை எதிர்த்து மாணவி நிபா நாஸ் என்பவர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. 

இந்த மனுவை  அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் மூத்த வழக்கறிஞர் சஞ்செய் ஹெக்டே இன்று  சுப்ரீம் கோர்ட்டில் முறையீட்டார். ஆனால், ஹோலி பண்டிகைக்கு பிறகு மனுவை விசாரணைக்கு பட்டியலிடுவது குறித்து பரிசீலிப்பதாக சுப்ரீம் கோர்ட் தெரிவித்தது. 

ஹிஜாப் தடையை உறுதி செய்த ஐகோர்ட்

கர்நாடகத்தில் கடலோர பகுதியில் இருக்கும் உடுப்பி மாவட்டம் குந்தாப்புரா டவுனில் அரசு பி.யூ.கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு படித்து வரும் முஸ்லிம் மாணவிகள் கடந்த மாதம்(பிப்ரவரி) 1-ந் தேதி ஹிஜாப் அணிந்து வகுப்புக்கு வந்தனர். 

அக்கல்லூரியின் முதல்வர், வகுப்பு அறைக்குள் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர தடை விதித்து உத்தரவிட்டார். அந்த தடையை மீறி அந்த முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்தனர். அவர்களை அக்கல்லூரி முதல்வர், வகுப்புக்குள் அனுமதிக்கவில்லை. அவர்கள் கல்லூரி வளாகத்திற்கு வெளியே தடுத்து நிறுத்தப்பட்டனர்.

அதை கண்டித்து அந்த முஸ்லிம் மாணவிகள் அங்கேயே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு பதிலடி தரும் விதமாக இந்து மாணவர்கள் கழுத்தில் காவி துண்டு போட்டு கல்லூரிக்கு வந்தனர். இதனால் அந்த கல்லூரியில் இருதரப்பு மாணவர்கள் இடையே மோதல் ஏற்படும் நிலை உண்டானது.

மேலும் கர்நாடக அரசின் பள்ளி கல்வித்துறை கடந்த பிப்ரவரி மாதம் 5-ந் தேதி, கர்நாடகத்தில் பள்ளி-கல்லூரி மாணவர்கள், அந்தந்த கல்லூரி வளர்ச்சி குழுக்கள் முடிவு செய்யும் சீருடையை கட்டாயம் அணிய வேண்டும் என்றும், சமத்துவம், ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் பொது அமைதிக்கு இடையூறு ஏற்படுத்தும் ஆடைகளை அணியக்கூடாது என்றும் உத்தரவிட்டது. அதாவது ஹிஜாப் உள்பட மத அடையாள ஆடைகளை அணியக்கூடாது என்பதை அந்த உத்தரவு வலியுறுத்தியது.

இதையடுத்து அதே மாதம் 8-ந் தேதி மாணவர்கள் மண்டியா, உடுப்பி, சிவமொக்கா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தினர். இதனால் சிவமொக்கா, தாவணகெரே, விஜயாப்புரா உள்ளிட்ட பல இடங்களில் கலவரம் ஏற்பட்டது. போலீசார் தடியடி நடத்தினர். கண்ணீர் புகை குண்டுகளை வீசி மாணவர்களை கட்டுப்படுத்தினர். மண்டியாவில் ஒரு முஸ்லிம் மாணவியை சுற்றி வளைத்து மாணவர்கள் ஜெய் ஸ்ரீராம் என்று கோஷமிட்டனர். இந்த வீடியோ நாடு முழுவதும் பரவி அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த ஹிஜாப் விவகாரம் உடுப்பி மட்டுமின்றி மாநிலம் முழுவதும் பரவியது. இதனால் கல்வி நிலையங்களில் பதற்றமான சூழல் உருவானது. இந்த சம்பவத்தை தொடர்ந்து பள்ளி, கல்லூரிகளுக்கு ஒரு வாரத்திற்கு மேலாக விடுமுறை விதித்து உத்தரவிட்டது. இந்த நிலையில் உடுப்பி மாணவிகள் 11 பேர், கர்நாடக ஐகோர்ட்டில் ரிட் மனுக்களை தாக்கல் செய்து, சீருடை குறித்து கர்நாடக அரசு பிறப்பித்துள்ள உத்தரவை ரத்து செய்யுமாறும், ஹிஜாப் அணிந்து வகுப்பில் ஆஜராக தங்களை அனுமதிக்கும்படியும் மாநில அரசுக்கு உத்தரவிடுமாறு கோரினர்.

அந்த மனுக்கள் தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி மற்றும் நீதிபதிகள் கிருஷ்ண தீட்சித், ஜே.எம்.காஜி ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்னிலையில் விசாரணைக்கு வந்தன. முதல் முறையாக கடந்த பிப்ரவரி மாதம் 10-ந்ேததி மனுக்களை விசாரித்த நீதிபதிகள், மாணவர்கள் ஹிஜாப், காவி உள்பட மத அடையாள ஆடைகளை அணிந்து வகுப்பில் ஆஜராக தடை விதித்து இடைக்கால உத்தரவை பிறப்பித்தனர். அதைத்தொடர்ந்து ஹிஜாப் விவகாரத்தில் பள்ளி-கல்லூரிகளில் நீடித்து வந்த பதற்றம் தணிந்தது.

இந்த ரிட் மனுக்கள் மீது ஐகோர்ட்டில் தினசரி அடிப்படையில் விசாரணை நடைபெற்றது. 10-ந் தேதி தொடங்கிய இந்த விசாரணை 25-ந் தேதி வரை 11 நாட்கள் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து தீர்ப்பு, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. விசாரணையின்போது, அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் பிரபுலிங்க நாவதகி, மனுதாரர்கள் சார்பில் தேவதத் காமத், ரவிவர்மகுமார் உள்ளிட்ட வக்கீல்கள் தங்களின் தரப்பு வாததத்தை எடுத்து வைத்தனர். இந்த நிலையில் இறுதி விசாரணை நிறைவடைந்து 20 நாட்களுக்கு பிறகு ஹிஜாப் வழக்கில் 15-ந் தேதி (நேற்று) தீர்ப்பு வழங்கப்படும் என்று ஐகோர்ட்டு அறிவித்தது. இதனால் இந்த தீர்ப்பின் மீது கர்நாடகம் மட்டுமின்றி நாடு முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

அதன்படி ஹிஜாப் வழக்கில் கர்நாடக ஐகோர்ட்டில் தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி, நீதிபதிகள் கிருஷ்ண தீட்சித், ஜே.எம்.காஜி ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பை அறிவித்தது. தீர்ப்பில் மூன்று நீதிபதிகளும் கையெழுத்திட்ட பிறகு தலைமை நீதிபதி தீர்ப்பின் முக்கிய அம்சங்களை வாசித்தார்.

அந்த தீர்ப்பில் பள்ளி-கல்லூரிகளில் மாணவர்கள் ஹிஜாப் அணிய தடை விதித்து அரசு பிறப்பித்து உத்தரவு செல்லும் என்றும், மாணவிகளின் ரிட் மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுவதாகவும் நீதிபதிகள் கூறினர். இதுகுறித்து தீர்ப்பில் கூறியிருப்பதாவது:-

ஹிஜாப் அணிவது இஸ்லாம் மதத்தில் அத்தியாவசியமாக பின்பற்றப்படும் நிகழ்வு அல்ல. குரானில் ஹிஜாப் அணிவது கட்டாயப்படுத்தவில்லை. சீருடை குறித்து உத்தரவிடும் அதிகாரம் அரசுக்கு உள்ளது. அதன்படியே கடந்த பிப்ரவரி மாதம் 5-ந் தேதி மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவை செல்லாது என்று கூறி யாரும் எதிர்க்க முடியாது. அதனால் அரசின் உத்தரவை ரத்து செய்ய கோரிய இந்த ரிட் மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுகின்றன. மாணவிகளை கல்லூரிக்கு வெளியே நிறுத்திய கல்லூரி முதல்வர், ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட முடியாது” இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story