12 முதல் 14 வயது வரையிலான சிறுவர், சிறுமியருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது: பிரதமர் மோடி வாழ்த்து
இந்தியாவில் 12 முதல் 14 வயது வரையிலான சிறுவர், சிறுமியருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது.
புதுடெல்லி,
கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக நாடு தீவிரமாக போராடி வருகிறது. கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசிகள் பேராயுதங்களாக பார்க்கப்படுகின்றன. கடந்த ஆண்டு ஜனவரி 16-ந் தேதி முதல் இந்தியாவில் உலகின் மிகப்பெரிய கொரோனா தடுப்பூசி திட்டம் செயல்படத்தொடங்கி பல்வேறு கட்டங்களாக விரிவுபடுத்தப்பட்டது.
அந்த வகையில் அடுத்தகட்டமாக 12 முதல் 14 வயது வரையிலான சிறுவர், சிறுமிகளுக்கு தேசிய தடுப்பூசி தினமான இன்று (16-ந் தேதி) முதல் கொரோனா தடுப்பூசி போடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் 12 முதல் 14 வயது வரையிலான சிறுவர், சிறுமியருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கி உள்ளது. மேலும் 60 வயதான அனைவருக்கும் முன் எச்சரிக்கை டோஸ் என்ற பெயரில் பூஸ்டர் தடுப்பூசி டோஸ்களும் இன்று முதல் செலுத்தப்பட்டு வருகின்றன. 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்தி, 9 மாதங்கள் (36 வாரங்கள்) ஆனவர்களுக்கு இந்த முன் எச்சரிக்கை டோஸ் தடுப்பூசி இன்று முதல் போடப்பட்டு வருகிறது.
முதல் 2 டோஸ் தடுப்பூசியாக கோவேக்சின், கோவிஷீல்டு ஆகியவற்றில் எது, யாருக்கு செலுத்தப்பட்டதோ, அதுவே பூஸ்டர் டோசாக அவர்களுக்கு செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் 12 முதல் 14 வயது வரையிலான சிறுவர், சிறுமியருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியதற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “நமது குடிமக்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான இந்தியாவின் முயற்சிகளில் இன்று முக்கியமான நாள். இப்போது முதல், 12-14 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் தடுப்பூசிகளுக்கு தகுதியுடையவர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் முன்னெச்சரிக்கை டோஸ்களுக்கு தகுதியுடையவர்கள். இந்த வயதினரை தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
தடுப்பூசி திட்டத்தின் கீழ், பல நாடுகளுக்கு தடுப்பூசிகளை அனுப்பினோம். இந்தியாவின் தடுப்பூசி முயற்சிகள் கொரோனாவுக்கு எதிரான உலகளாவிய போராட்டத்தை வலுப்படுத்தியதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
இன்று, இந்தியாவில் பல ‘மேட் இன் இந்தியா’ தடுப்பூசிகள் உள்ளன. உரிய மதிப்பீட்டிற்குப் பிறகு மற்ற தடுப்பூசிகளுக்கும் அனுமதி வழங்க உள்ளோம். இந்த கொடிய தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கு நாம் சிறந்த நிலையில் இருக்கிறோம். அதே நேரத்தில், கொரோனா தொடர்பான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் நாம் தொடர்ந்து பின்பற்ற வேண்டும்” என்று அதில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story