பஞ்சாப் முதல்-மந்திரியாக பதவியேற்ற பகவந்த் மானுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
பஞ்சாப் முதல்-மந்திரியாக இன்று பதவியேற்றுள்ள பகவந்த் மானுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
பஞ்சாப் சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 117 தொகுதிகளில் ஆம் ஆத்மி 92 தொகுதிகளை கைப்பற்றி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. இதையடுத்து பஞ்சாபின் புதிய முதல்-மந்திரியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆம் ஆத்மி வேட்பாளர் பகவந்த் மான் இன்று பதவியேற்று கொண்டார்.
அவருக்கு பஞ்சாப் மாநில கவர்னர் பன்வாரிலால் புரோகித் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். சுதந்திர போராட்ட வீரர் பகத் சிங் பிறந்த ஊரான கத்கர் கலன் கிராமத்தில், பதவியேற்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் டெல்லி முதல்-மந்திரியும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி துணை-முதல் மந்திரி மணீஷ் சிசோடியா உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் இன்று பஞ்சாப் முதல்-மந்திரியாக பதவியேற்றுள்ள பகவந்த் மானுக்கு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “ பஞ்சாப் முதல்-மந்திரியாக பதவியேற்றுள்ள பகவந்த் மானுக்கு வாழ்த்துக்கள். பஞ்சாப் மாநில மக்களின் வளர்ச்சிக்காகவும், நன்மைக்காகவும் இணைந்து பணியாற்றுவோம்” என்று தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story