நடிகர் சங்க தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு தடை இல்லை - மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்டு
நடிகர் சங்க தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க மறுத்து, மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.
புதுடெல்லி,
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு கடந்த 2019-ம் ஆண்டு் ஜூன் 23-ந் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. ஆனால் ஐகோர்ட்டு உத்தரவுப்படி வாக்கு எண்ணிக்கை நடத்தாமல் வங்கி லாக்கரில் வாக்குப்பெட்டிகள் பத்திரமாக வைக்கப்பட்டன.
இதற்கிடையே நடிகர் சங்க தேர்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதி கல்யாணசுந்தரம் தேர்தல் செல்லாது என்று தீர்ப்பு அளித்தார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை கடந்த மாதம் (பிப்ரவரி) 23-ந் தேதி விசாரித்த நீதிபதிகள், தனி நீதிபதியின் தீர்ப்பு செல்லாது என்றும், நடிகர் சங்க தேர்தல் செல்லும் என்றும் தீர்ப்பு அளித்தனர்.
மேலும் வாக்கு எண்ணிக்கை நடத்தவும் உத்தரவிட்டனர்.
இதனையடுத்து ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து நடிகர் ஏழுமலை என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.
அதில், ‘சென்னை ஐகோர்ட்டு கடந்த மாதம் (பிப்ரவரி) 23-ந் தேதி கூறிய தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும். இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்து தீர்ப்பு அளிக்கும் வரை நடிகர் சங்க தேர்தலில் ஏற்கனவே பதிவான வாக்குகளை எண்ணவும், தேர்தல் முடிவுகளை அறிவிக்க இடைக்கால தடை விதிக்க வேண்டும்’ என்றும் கோரியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு விசாரித்தது.
இதில் நடிகர் ஏழுமலை சார்பில் வக்கீல் நேப்பினை ஆஜராகி, ‘நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகள் ஞாயிற்றுக்கிழமை எண்ணப்பட உள்ளது’ என வாதிட்டார்.
அப்போது நீதிபதிகள், ‘இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு தலையிட வேண்டுமா?’ என வினவினர்.
அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் விளக்கம் அளித்து வாதாடும்போது, ‘தேர்தலை எப்படி நடத்த வேண்டும் என தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சட்ட விதிகளில் தெளிவாக்கப்பட்டுள்ளது என தெரிவித்து ‘மியூசிக் அகாடமி' வழக்கில் சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பையும் சுட்டிக்காட்டினார்.
வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், ‘தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு கடந்த 2019-ல் நடந்த தேர்தல் செல்லும் என்ற சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக நடிகர் ஏழுமலை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
இதன் மூலம் நடிகர் சங்க தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு தடை இல்லை என்பது தெரியவருகிறது.
Related Tags :
Next Story