ஜனநாயகத்துக்கு ஆபத்தானது: ‘அரசியலில் சமூக ஊடகங்கள் தலையீட்டுக்கு முடிவு கட்டுங்கள்’ - சோனியா ஆவேசம்


ஜனநாயகத்துக்கு ஆபத்தானது: ‘அரசியலில் சமூக ஊடகங்கள் தலையீட்டுக்கு முடிவு கட்டுங்கள்’ - சோனியா ஆவேசம்
x
தினத்தந்தி 17 March 2022 5:18 AM IST (Updated: 17 March 2022 5:18 AM IST)
t-max-icont-min-icon

சமூக ஊடகங்கள் இந்திய ஜனநாயகத்துக்கு ஆபத்தானவை, தேர்தல் அரசியலில் அவற்றின் தலையீட்டுக்கு முடிவு கட்டுங்கள் என்று மக்களவையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆவேசமாக வலியுறுத்தினார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் பூஜ்ய நேரத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி எழுந்து ஒரு பிரச்சினையை எழுப்பினார்.

அப்போது அவர், “எங்கள் அந்தரங்க உரிமைக்குள் ஊடுருவுவதற்கு சமூக ஊடகங்கள் பயன்படுத்தப்படுகிற ஆபத்து பற்றி பேச விரும்புகிறேன். சமூக ஊடக நிறுனங்கள் இந்தியாவின் உள்நாட்டு அரசியலில் செல்வாக்கு செலுத்துகின்றன” என ஆவேசமாக கூறினார்.

அப்போது சபாநாயகர் ஓம் பிர்லா, “நீங்கள் என்ன தெரிவிக்க விரும்புகிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பினார்.

அப்போது சோனியா காந்தி தொடர்ந்து கூறியதாவது:-

டுவிட்டர் மற்றும் பேஸ்புக் போன்ற உலகளாவிய நிறுவனங்கள், தலைவர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் அவர்களின் பினாமிகளால் அரசியல் கதைகளை வடிவமைக்க அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன.

உலகளாவிய சமூக ஊடக நிறுவனங்கள், அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் சமமான இடத்தை வழங்குவது இல்லை என்பது பல முறை மக்கள் கவனத்துக்கு வந்துள்ளது.

கடந்த ஆண்டு அமெரிக்காவின் ‘வால்ஸ்ட்ரீட்’ பத்திரிகை, பேஸ்புக்கின் சொந்த வெறுப்பு பேச்சு விதிகள், ஆளும் கட்சி அரசியல்வாதிகளுக்கு ஆதரவாக எப்படி வளைக்கப்படுகின்றன என்பது பற்றிய செய்தியை வெளியிட்டது. நமது நாட்டின் தேர்தல் சட்டங்களை புறந்தள்ளிவிட்டு, பேஸ்புக் தனது சொந்த விதிகளையும் மீறி, அரசுக்கு எதிராக பேசுகிறவர்களின் குரலை முற்றிலுமாக நசுக்குகிறது என்பதை அல்ஜசீரா, ரிப்போர்டர்ஸ் கலெக்டிவ் ஊடகங்கள் சுட்டிக்காட்டி உள்ளன.

ஆளும் அதிகாரத்தின் துணையுடன் சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் அப்பட்டமான செயல், நமது ஜனநாயகத்துக்கு ஆபத்தானது.

இந்திய அரசியலில் சமூக ஊடகங்கள் தலையிடும் போக்கு உள்ளது. இது இந்திய ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் தேர்தல் அரசியலில், பேஸ்புக் மற்றும் பிற சமூக ஊடக நிறுவனங்களின் முறையான செல்வாக்கு, தலையீடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று அரசை வலியுறுத்துகிறேன்.

இது கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டதாகும். யார் ஆட்சியில் இருந்தாலும், நமது ஜனநாயகத்தையும், சமூக நல்லிணக்கத்தையும் நாம் பாதுகாக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதற்கிடையே சமூக ஊடகங்களுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டார். தேர்தலின்போது வாக்காளர்களைச் சென்றடைவதற்கு பா.ஜ.க.வுக்கு டுவிட்டர் உதவியதாக அதில் அவர் குற்றம் சாட்டி உள்ளார்.

ஜனநாயகத்துக்கு ‘மெட்டா’ (பேஸ்புக் நிறுவனம்) மோசமானது என சாடி இருக்கிறார்.

தேர்தல் விளம்பரங்களுக்கு, மற்ற அரசியல்கட்சிகளுடன் ஒப்பிடுகையில் பா.ஜ.க.வுக்கு பேஸ்புக் மலிவான சலுகைகள் வழங்கியதாக சுட்டிக்காட்டுகிற அல்ஜசீரா, தி ரிப்போர்ட்டர்ஸ் கில்டு ஊடகங்களின் அறிக்கைகளையும் ராகுல் காந்தி பகிர்ந்துள்ளார்.

Next Story