பகத்சிங் கிராமத்தில் விழா: பஞ்சாப் முதல்-மந்திரியாக பகவந்த் மான் பதவியேற்பு - பிரதமர் மோடி வாழ்த்து
பஞ்சாப் முதல்-மந்திரியாக பகவந்த் மான் நேற்று பதவியேற்றார். அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து ெதரிவித்து உள்ளார்.
சண்டிகார்,
பஞ்சாப்பில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 117 இடங்களில் 92 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை கைப்பற்றியது.
இதைத்தொடர்ந்து மாநிலத்தில் புதிய அரசு அமைப்பதற்கான ஏற்பாடுகளை ஆம் ஆத்மி மேற்கொண்டது. கட்சியின் முதல்-மந்திரி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருந்த பகவந்த் மான் (வயது 48), இதற்கான பணிகளை மேற்கொண்டார்.
பஞ்சாப்பை சேர்ந்த பிரபல சுதந்திர போராட்ட வீரரான பகத் சிங்கின் பூர்வீக கிராமமான கத்கர் காலனில் பதவியேற்பு விழாவை நடத்த அவர் நடவடிக்கை மேற்கொண்டார்.
தேர்தலுக்குப்பின் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் கூடி பகவந்த் மானை சட்டமன்ற கட்சித்தலைவராக (முதல்-மந்திரி) தேர்வு செய்தனர். அதைத்தொடர்ந்து கவர்னரை சந்தித்து மாநிலத்தில் புதிய அரசை அமைக்க அவர் உரிமை கோரினார். இதைத்தொடர்ந்து கவர்னர் பன்வாரிலால் புரோகித்தும், பகவந்த் மாைன புதிய அரசு அமைக்க அழைப்பு விடுத்தார்.
அதன்படி நேற்று மதியம் 1.25 மணிக்கு கத்கர் காலனில் பதவியேற்பு விழா நடந்தது. இதில் பகவந்த் மானுக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித், பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள், கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்-மந்திரியுமான கெஜ்ரிவால், துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியா, டெல்லி மந்திரி சத்யேந்தர் ஜெயின் உள்ளிட்ட தலைவர்கள் நேரில் பங்கேற்று பகவந்த் மானுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் முதல்-மந்திரி பகவந்த் மான் மட்டும் பதவியேற்றுக்கொண்டார். மந்திரிகளின் பதவியேற்பு பின்னர் நடைபெறும் என தெரிகிறது.
ஏராளமான பாடகர்கள், நடிகர்கள் மற்றும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான ஆம் ஆத்மி தொண்டர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆண்கள் மஞ்சள் தலைப்பாகையும், பெண்கள் மஞ்சள் துப்பட்டாவும் அணிந்திருந்தனர். இதனால் விழா அரங்கு முழுவதும் எங்கு நோக்கினும் மஞ்சள் நிறத்திலேயே காணப்பட்டது.
முதல்-மந்திரியாக பதவியேற்றுக்கொண்ட பகவந்த் மான் பின்னர் பேசும்போது, வேலையில்லா திண்டாட்டம், ஊழல் மற்றும் விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தனது அரசு முக்கியத்துவம் கொடுக்கும் என தெரிவித்தார்.
மாநிலத்தில் பள்ளிகள், மருத்துவமனைகள் அனைத்தும் ஆம் ஆத்மி ஆளும் டெல்லியில் இருப்பதுபோன்று தரம் உயர்த்தப்படும் எனக்கூறிய பகவந்த் மான், புதிய அரசின் பணிகள் அனைத்தும் இன்று (நேற்று) முதலே தொடங்கும் எனவும் கூறினார்.
முன்னதாக பதவியேற்பு விழாவுக்கு செல்வதற்கு முன் அவர் தனது டுவிட்டர் தளத்தில், ‘சூரியனின் பொற்கதிர் இன்று ஒரு புதிய விடியலைக் கொண்டு வந்துள்ளது. பகத்சிங் மற்றும் பாபா சாஹேப் அம்பேத்கரின் கனவுகளை நிறைவேற்ற, ஒட்டுமொத்த பஞ்சாப்பும் இன்று கட்கர் காலனில் பதவியேற்க உள்ளது’ என்று குறிப்பிட்டு இருந்தார்.
பஞ்சாப்பின் புதிய முதல்-மந்திரியாக பதவியேற்றுள்ள பகவந்த் மானுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ெதரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில், ‘பஞ்சாப் முதல்வராக பதவியேற்ற பகவந்த் மான் ஜிக்கு வாழ்த்துகள். பஞ்சாப்பின் வளர்ச்சிக்கும், மாநில மக்களின் நலனுக்காகவும் இணைந்து செயல்படுவோம்’ என்று கூறியுள்ளார்.
Related Tags :
Next Story