காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி தலைவர்கள் சோனியாவுடன் சந்திப்பு?


Image Courtesy: PTI
x
Image Courtesy: PTI
தினத்தந்தி 17 March 2022 9:57 AM IST (Updated: 17 March 2022 9:57 AM IST)
t-max-icont-min-icon

காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி தலைவர்கள் குழு இன்று கட்சித் தலைவர் சோனியா காந்தியை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

புதுடெல்லி, 

நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தோ்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்த நிலையில், கட்சியின் செயற்குழுக் கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையடுத்து, கட்சியில் அமைப்பு ரீதியாக சீா்திருத்தம் கோரி வரும் ஜி-23 தலைவா்கள் குழுவைச் சோ்ந்த கபில் சிபல், கட்சித் தலைமை பொறுப்பில் இருந்து காந்தி குடும்பத்தினா் விலகியிருக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தாா். 

அவருடைய கருத்து, கட்சி வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. இருப்பினும், சோனியா தலைமை மீது நம்பிக்கை வைத்திருப்பதாக ஜி-23 குழுவைச் சோ்ந்த ஆனந்த் சா்மாவும், குலாம் நபி ஆசாதும் காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் தெரிவித்திருந்தனா்.

இந்த சூழலில் புதன்கிழமை நடைபெற்ற ஜி-23 தலைவா்களின் கூட்டத்துக்குப் பிறகு சோனியா காந்தியைத் தொடா்புகொண்டு பேசிய குலாம் நபி ஆசாத், கட்சியை வலுப்படுத்துவதற்கு தொடா்ந்து ஆதரவு அளிப்போம் என்று கூறியதாகத் தகவல் வெளியாகி இருந்தன. 

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் ஜி-23 என்னும் அதிருப்தி தலைவர்கள் குழு இன்று கட்சி தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

முன்னதாக காங்கிரஸ் கட்சியின் ஜி-23 தலைவா்களின் கூட்டம், டெல்லியில் கட்சியின் மூத்த தலைவா் குலாம் நபி ஆசாதின் இல்லத்தில் நேற்று இரவு நடைபெற்றது. சுமாா் 4 மணி நேரத்துக்கு மேல் நடைபெற்ற கூட்டத்தில், ஆனந்த் சா்மா, கபில் சிபல், பூபிந்தா் சிங் ஹூடா, பிருத்விராஜ் சவாண், மணீஷ் திவாரி, சசி தரூா், விவேக் தன்கா, ராஜ் பப்பா், அகிலேஷ் பிரசாத் சிங், சந்தீப் தீக்ஷித் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். 

Next Story