சட்டவிரோத மீன்பிடித்தலில் ஈடுபட்ட இலங்கை மீனவர்கள் 6 பேர் கைது
மன்னார் வளைகுடா பகுதியில் சட்டவிரோத மீன்பிடித்தலில் ஈடுபட்ட இலங்கையை சேர்ந்த மீனவர்கள் 6 பேரை இந்திய கடலோர காவல் படை கைது செய்துள்ளது.
புதுடெல்லி,
இந்திய கடல் எல்லையை ஒட்டிய பகுதியில், பாதுகாப்பு மற்றும் ரோந்து பணி ஆகியவற்றில் இந்திய கடலோர காவல் படை ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், இந்திய கடலோர காவல் படை வெளியிட்டுள்ள செய்தியில், மன்னார் வளைகுடா பகுதியில், சட்டவிரோத வேட்டையை தடுக்கும் பணியில் ஈடுபட்டபோது, தினுகா புத்த-6 என்ற பெயரிடப்பட்ட இலங்கையை சேர்ந்த மீன்பிடி படகு ஒன்றை பறிமுதல் செய்தோம்.
இந்திய பொருளாதார மண்டலத்திற்குள் அத்துமீறி மீன்பிடிப்பதற்காக நுழைந்த இலங்கையை சேர்ந்த மீனவர்கள் 6 பேரை கைது செய்துள்ளோம். அவர்கள் பயணித்த படகையும் கைப்பற்றி உள்ளோம் என தெரிவித்து உள்ளது.
கன்னியாகுமரியில் இருந்து தென்கிழக்கே 117 கடல் மைல்கள் தொலைவில் சென்ற படகை, இந்திய கடலோர காவல் படையை சேர்ந்த வஜ்ரா கப்பலில் இருந்த கடலோர காவல் படையினர் கண்காணித்து கண்டறிந்தனர். அதனை வழிமறித்து மீனவர்களிடம் விசாரித்தனர். இதில், மீனவர்கள் தப்பியோட முயற்சித்து உள்ளனர். அவர்களை கைது செய்து, மீன்பிடி வலைகளும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
இந்திய பொருளாதார மண்டலத்திற்குள் நுழைந்து, சட்டவிரோத மீன்பிடித்தலில் ஈடுபட்ட இலங்கை மீனவர்கள் இந்திய சட்ட விதிகளை மீறியுள்ளனர் என கடலோர காவல் படை தெரிவித்து உள்ளது. தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
Related Tags :
Next Story