தென்கொரிய புதிய அதிபருக்கு பிரதமர் மோடி வாழ்த்து இருதரப்பு உறவுகள் குறித்தும் ஆலோசனை
தென்கொரியாவில் சமீபத்தில் நடந்த தேர்தலில் யூன் சுக்-யோல் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.
புதுடெல்லி,
தென்கொரியாவில் சமீபத்தில் நடந்த தேர்தலில் யூன் சுக்-யோல் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். அவருக்கு பிரதமர் மோடி நேற்று தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார். அப்போது இரு நாட்டு உறவுகளை மேம்படுத்துவது குறித்தும் இருவரும் ஆலோசனை நடத்தினர்.
இது தொடர்பாக பிரதமர் தனது டுவிட்டர் தளத்தில், ‘தென்கொரிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள யூன் சுக்-யோலுடன் ஒரு சிறப்பான உரையாடல் நடந்தது. அதிபர் தேர்தலில் அவர் பெற்ற வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தேன். பல்வேறு துறைகளில் இந்தியா - தென்கொரியா இடையேயான சிறப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் நாங்கள் விவாதித்தோம்’ என குறிப்பிட்டு இருந்தார்.
இந்த உரையாடலின்போது, இந்தியா - தென்கொரியா இடையே தூதரக உறவுகள் ஏற்படுத்தப்பட்ட 50-வது ஆண்டு விழாவை அடுத்த ஆண்டு கூட்டாக கொண்டாடுவதற்கான விருப்பத்தை இரு தலைவர்களும் வெளியிட்டதாக மத்திய அரசு கூறியுள்ளது. மேலும் இந்தியாவுக்கு விரைவில் வருமாறு தென்கொரியாவின் புதிய அதிபருக்கு பிரதமர் மோடி அழைப்பும் விடுத்துள்ளார்.
Related Tags :
Next Story