கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கைவிடக்கூடாது: மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை
தெற்கு ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத்தொடங்கியுள்ள நிலையில், தடுப்பு நடவடிக்கைகளை கைவிடக்கூடாது என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
புதுடெல்லி,
தெற்கு ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கைவிடக்கூடாது என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன், மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், “ பரிசோதனை, தடம் கண்டறிதல், சிகிச்சை அளித்தல், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுதல், தடுப்பூசி போட்டுக்கொள்ளுதல் ஆகிய 5 தடுப்பு நடவடிக்கை தொடர்ந்து தீவிரமாக பின்பற்ற வேண்டும். பரிசோதனைகளை குறைக்கக்கூடாது. தேவையான அளவில் தொடர்ந்து பரிசோதனைகளை மேற்கொண்டு புதிய வகை கொரோனா பரவுவதை உரிய நேரத்தில் கண்டறிய வேண்டும். மக்களை தடுப்பூசி செலுத்திக்கொள்ளவும் தொடர்ந்து ஊக்கப்படுத்த வேண்டும்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளான மாஸ்க் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், கைகளை அடிக்கடி கழுவதல் போன்ற தூய்மை நடவடிக்கைகளை மக்கள் தொடர்ந்து பின்பற்றுவதை உறுதி செய்ய போதுமான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா 3-வது அலை பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. கடந்த சில வாரங்களாவே கொரோனா தொற்று பாதிப்பு வேகமாக சரிந்து வரும் நிலையில், சில தெற்கு ஆசிய நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. கடந்த 16 ஆம் தேதி சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தலைமையில் உயர்மட்ட அதிகாரிகள் கூட்டம் நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில், மரபணு வரிசை சோதனை, தீவிர கண்காணிப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
Related Tags :
Next Story