புதுவை சட்டசபை வருகிற 30-ந்தேதி கூட வாய்ப்பு
புதுவை சட்டசபையில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கம்.
புதுச்சேரி,
புதுவை சட்டசபையில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மார்ச் மாத இறுதியில் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதன் பிறகு முழுமையான பட்ஜெட் என்பது தாக்கல் செய்யப்படாமல் மார்ச் மாத இறுதியில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு அதன்பிறகு முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கமாகிவிட்டது. இருப்பினும் இந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்தார். ஆனால் தற்போதும் பல்வேறு காரணங்களால் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் அடுத்த 4 அல்லது 5 மாதங்களுக்கு அரசின் செலவினங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்கு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக புதுவை சட்டசபை வருகிற 30-ந்தேதி கூட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதையொட்டி அதற்கான பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகின்றன. முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படாத நிலையில் சட்டசபையில் கவர்னர் உரை இடம்பெறாது என்று தெரிகிறது.இதற்கிடையே என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களுக்கு வாரிய தலைவர் பதவி வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story