உத்தரகாண்ட் சட்டசபையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்கள் நாளை பதவியேற்பு..!


கோப்புப் படம் ANI
x
கோப்புப் படம் ANI
தினத்தந்தி 20 March 2022 10:39 AM GMT (Updated: 20 March 2022 10:39 AM GMT)

உத்தரகாண்ட் சட்டசபையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்கள் நாளை பதவியேற்க உள்ளனர்.

டேராடூன், 

நடந்து முடிந்த உத்தரகாண்ட் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க அபார வெற்றி பெற்று ஆட்சியைத்தக்க வைத்தது. மொத்தம் உள்ள 70 இடங்களில் அந்தக் கட்சி 47 இடங்களை பிடித்தது. ஆனாலும் அந்த மாநில முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி (வயது 46) காதிமா தொகுதியில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். இதனால் புதிய முதல்-மந்திரி பதவி யாருக்கு என்ற கேள்வி எழுந்துள்ளது.

புதிய முதல்-மந்திரி பதவிக்கு, தேர்தலில் தோல்வியடைந்த புஷ்கர் சிங் தாமி பெயர்தான் பலமாக அடிபடுகிறது. மற்றபடி, சத்பால் மகாராஜ், தன்சிங் ராவத், அனில் பலூனி ஆகியோருடைய பெயர்களும் அடிபடுகின்றன.

ஆனாலும் புஷ்கர்சிங் தாமி இளமையாகவும், சுறுசுறுப்பாகவும் இருப்பதாலும், அவரது பெயரில் பா.ஜ.க. போட்டியிட்டு பெரிய வெற்றியை பதிவு செய்திருப்பதாலும் அவருக்கு மீண்டும் வாய்ப்பு தரப்படலாம் என்றும் மாநில பா.ஜ.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏக்கள் சட்டசபையில் நாளை பதவியேற்பார்கள் என்று அம்மாநில பாஜக தலைவர் மதன் கவுசிக் கூறியுள்ளார். மேலும் அதன்பிறகு நாளை மாலை நடைபெறும் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் புதிய முதல் மந்திரி குறித்த முடிவுகள் எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது;- புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அனைத்து எம்.எல்.ஏக்களும் நாளை காலை 11 மணிக்கு சட்டசபையில் பதவியேற்பார்கள். அதன்பிறகு மாலை கட்சி எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறும். அந்த கூட்டத்தில் முதல் மந்திரியின் பெயர் அறிவிக்கப்படும் என்று கூறினார்.

Next Story