வரலாற்றில் முதல்முறையாக இந்தியாவில் ரூ.1,500 கோடி மதிப்பில் முதலீடு செய்யும் ஆஸ்திரேலியா..!
இந்தியா - ஆஸ்திரேலியா இருதரப்பு உச்சி மாநாடு திங்கள்கிழமை நடைபெறவுள்ளது.
புதுடெல்லி,
இந்தியா - ஆஸ்திரேலியா இருதரப்பு உச்சி மாநாடு திங்கள்கிழமை நடைபெறவுள்ளது. இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு 1,500 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டை பல்வேறு துறைகளில் ஆஸ்திரேலியா அறிவிக்கவுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
இந்தியா - ஆஸ்திரேலியா இருதரப்பு உச்சி மாநாடு குறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் இந்த மாத இறுதிக்குள் முன்கூட்டியே ஒரு விரிவான ஒப்பந்தத்திற்கு முன் வரைவு ஒப்பந்தம் செய்து கொள்ளும். சில பொருட்களின் வர்த்தகத்தின் மீதான கட்டணங்களை தாராளமயமாக்குவதை நோக்கமாகக் கொண்டதாக அந்த ஒப்பந்தம் அமைய உள்ளது.
இரு நாடுகளும் முக்கியமான கனிமங்கள் துறையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளன. உலகின் மிகப்பெரிய லித்தியம் இருப்புக்களில் ஒன்றாக ஆஸ்திரேலியா விளங்குகிறது. மேலும் சுத்தமான உலோக நிலக்கரியை கொண்ட நாடாகவும் உள்ளது.
இந்த ஒப்பந்தம் ஆஸ்திரேலியாவில் இந்தியாவின் உலோக நிலக்கரி மற்றும் லித்தியம் அணுகலை அதிகரிக்க உதவும். இதன்மூலம், இந்தியாவின் வளர்ந்து வரும் மின்சார வாகனங்களுக்கான உள்கட்டமைப்பு பூர்த்தி செய்யப்படும்.
இருநாட்டு உறவை முன்னிறுத்தும் வகையில் கான்பெர்ரா நகரில் மையம் ஒன்றை இருநாடுகளும் தொடங்க உள்ளன. இருநாடுகளிடையே விண்வெளி, இணைய செயல்பாடுகள், தொழில்நுட்பம், விவசாயம், கல்வி மற்றும் ஒளிபரப்பு ஆகிய துறைகளிலும் முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்படும்.
வர்த்தகம், முக்கியமான கனிமங்கள், இடம்பெயர்வு மற்றும் இயக்கம் மற்றும் கல்வி ஆகியவற்றில் நெருக்கமான ஒத்துழைப்புடன் செயல்பட இருநாட்டு தலைவர்களும் உறுதியேற்க உள்ளனர். பரஸ்பர நலன் சார்ந்த பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகளும் தலைவர்களால் விவாதிக்கப்படும்.
இந்தியா-ஆஸ்திரேலியா விரிவான உறவு என்பது ஒரு குறியீடாக மட்டுமல்லாமல்,இருநாட்டு உறவில் குறிப்பிடத்தக்க ஆழமும் முக்கியத்துவமும் கொண்டது. உக்ரைன் விவகாரத்தில் இந்தியா எடுத்துள்ள நிலைப்பாட்டால், குவாட் அமைப்பு மற்றும் இந்தியா-ஆஸ்திரேலியா இருதரப்பு உறவுகளில் எதிர்மறையான தாக்கம் எதுவும் ஏற்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டுக்கு பின், மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி விரைவில் ஆஸ்திரேலியாவுக்கு செல்ல உள்ளார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மாநாடு புதிய முயற்சிகளுக்கு வழி வகுக்கும், இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு நாடுகளும் தங்களின் இருதரப்பு உறவுகளுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தையும், பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகளில் இரு நாடுகளின் நெருங்கிய ஒத்துழைப்பையும் இந்த உச்சிமாநாடு எடுத்துக்காட்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் கூறியதாவது:-
இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான உறவானது, ஜனநாயகத்திற்கான உறுதிப்பாட்டை அடிப்படையாகக் கொண்டு பரஸ்பர புரிதல் மற்றும் நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்துள்ளது. இந்தோ-பசிபிக் பற்றிய பரந்த பார்வையை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ளது.
பிரதமர் மோடியும் நானும், நமது வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவை ஆழப்படுத்துவது குறித்து விவாதிக்க உள்ளோம். மேலும், நமது பரஸ்பர பொருளாதார மீட்சி மற்றும் வளர்ச்சிக்கு ஆதரவாக புதிய பொருளாதார
வாய்ப்புகளைப் பயன்படுத்துவது குறித்து விவாதிக்க உள்ளோம்.
அவற்றின் மையப்பகுதியாக ராணுவம் மற்றும் பாதுகாப்பு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் முக்கியமான கனிமங்கள் மற்றும் சுத்தமான எரிசக்தி ஆகியவற்றில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து முக்கியத்துவம் அளிக்கப்படும்.
பல்வேறு பிராந்திய மற்றும் பலதரப்பு பிரச்சினைகளை இரு தரப்பும் விவாதிக்கும். உக்ரைனின் நிலைமை, அதனால் இந்தோ-பசிபிக் மற்றும் மியான்மருக்கு ஏற்படும் அதன் தாக்கங்கள் குறித்து இரு தரப்பும் விவாதிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story