அசானி புயல் எதிரொலி: அந்தமான், நிகோபார் தீவுகளில் தயார் நிலையில் பேரிடர் மீட்புப்படையினர்
அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளில் தேசிய பேரிடர் மீட்புப்படையினர் தயார் நிலையில் உள்ளனர்.
அந்தமான்,
தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. இந்த நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று மேலும் வலுப்பெற்றது.
அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு திசையில் அந்தமான்- நிக்கோபார் தீவு வழியாக நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடையும். அதன்பின்னர் அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலு பெறக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்த புயலுக்கு ‘அசானி’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலம் அந்தமான்- நிக்கோபர் தீவை நோக்கி வேகமாக நகர்ந்து வருவதால், அப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் தேசிய பேரிடர் மீட்புப்படையினர் தயார் நிலையில் உள்ளனர். மேலும், தாழ்வான பகுதிகளிலிருந்து மக்கள் வேறு இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
தீவுகளுக்கு இடையேயான கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதுடன், மீனவர்கள் வெளியே செல்லவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தீவுகளின் சில பகுதிகளில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எந்தவொரு அசாதாரண சூழ்நிலையையும் சமாளிக்க சரியாக திட்டமிட்டுள்ளதாக தீவு நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story