இனிவரும் கொரோனா அலைகளால் இந்தியாவுக்கு பாதிப்பு இல்லை - நிபுணர்கள் உறுதி


Image Courtesy: PTI
x
Image Courtesy: PTI
தினத்தந்தி 21 March 2022 5:27 AM IST (Updated: 21 March 2022 5:27 AM IST)
t-max-icont-min-icon

இனி வரும் கொரோனா அலைகளால் இந்தியாவுக்கு பாதிப்பு வராது என்று நிபுணர்கள் உறுதிபட தெரிவித்து இருக்கிறார்கள்.

புதுடெல்லி,

நமது நாடு கொரோனா வைரஸ் தொற்றின் 3-வது அலையை முடிவுக்கு கொண்டு வரும் நிலையில் உள்ளது. இந்த தருணத்தில் தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும், சில ஐரோப்பிய நாடுகளிலும் கொரோனா அலையில் எழுச்சி காணப்படுகிறது.

இதன்காரணமாக இனி எதிர்காலத்தில் வரும் அலைகளால் இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்படுமா, அது எந்த அளவில் இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. 

இது தொடர்பாக இந்திய நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் என பார்க்கலாம்.

டாக்டர் சஞ்சய்ராய் (டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியின் மூத்த தொற்று நோயியல் நிபுணர்) :-

இந்தியா மிகவும் அழிவுகரமான 2-வது அலையை சந்தித்தது துரதிர்ஷ்டவசமானது. ஆனால் அதுவே நமது பலம். ஏனென்றால், இயற்கை தொற்று நீண்டகால பாதுகாப்பை வழங்குகிறது. மேலும் தடுப்பூசி பாதுகாப்பு உள்ளது. எனவே எதிர்கால கொரோனா அலைகளின் கடுமையான தாக்கம் சாத்தியம் இல்லை. எனவே கட்டாய முக கவச உத்தரவை தளர்த்த அரசு பரிசீலிக்கலாம்.

டாக்டர் சந்திரகாந்த் லஹரியா (தொற்றுநோயியல் நிபுணர்):-

ஒமைக்ரான் பரவல் பற்றிய செரோ சர்வே, தடுப்பூசி பாதுகாப்பு உள்ளிட்ட தரவுகளை நாங்கள் ஆராய்கிறபோது, இந்தியாவில் கொரோனா முடிந்து விட்டது என்று முடிவு செய்வது தர்க்கரீதியானது. எனவே பல மாதங்களுக்கு புதிய எழுச்சிக்கோ, புதிய உருமாறிய கொரோனாவுக்கோ வாய்ப்பு மிகவும் குறைவு. கட்டாய முக கவச உத்தரவை தளர்த்தலாம்.

டாக்டர் ஜூகல் கிஷோர் (சமூக மருத்துவ துறை தலைவர், சப்தர்ஜிங் ஆஸ்பத்திரி):-

செரோ சர்வே பாசிட்டிவ் விகிதம், இந்திய மக்களில் 90 சதவீதம் வரையிலானோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என காட்டுகிறது. எனவே முக கவசம் அணிதல் போன்ற நடவடிக்கைகளை அகற்றலாம். இயற்கையான தொற்று காரணமாக கொரோனா புதிய அலை வந்தால், மக்களுக்கு கடுமையான அறிகுறிகள் ஏற்பட வாய்ப்பு இல்லை.

டாக்டர் என்.கே.அரோரா (கோவிட் பணிக்குழு தலைவர்):-

அதிக தடுப்பூசி பாதுகாப்பு, பரலான நோய் பரவல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு பார்த்தால், இந்தியா கடுமையான அலைகளால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு. ஆனால் புதிய உருமாற்றங்களுக்கு வாய்ப்பு எப்போதும் இருப்பதால், அதுவரை பாதுகாப்பு நடவடிக்கைகளை குறைக்கக்கூடாது. 2-வது டோஸ் போட்டுக்கொள்ளாதவர்கள் போட்டுக்கொள்ள வேண்டும். 18 வயது வரையிலானவர்களும் தடுப்பூசிகள் 2 டோஸ் போட்டு முடித்துவிடவேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.

Next Story