ஆந்திர பிரதேசம்: சாராயம் காய்ச்சிய 70 ஆயிரம் பேர் கைது
ஆந்திர பிரதேசத்தில் ஒன்றரை ஆண்டுகளில் சட்டவிரோத சாராய உற்பத்தியில் ஈடுபட்ட 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
விஜயவாடா,
ஆந்திர பிரதேசத்தில் முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சி செய்து வருகிறது. அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முதல்-மந்திரியின் உறவினர்கள் சாராய உற்பத்தியில் ஈடுபட்டு பணம் ஈட்டுகின்றனர் என்று எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் குற்றச்சாட்டு தெரிவித்தது.
சட்டவிரோத சாராயம் அதிகரித்து உள்ளது என கூறி அரசுக்கு எதிராக அக்கட்சி கடந்த சனிக்கிழமை போராட்டத்திலும் ஈடுபட்டது. ஆந்திராவில் மட்டுமே உற்பத்தி செய்யப்படும் மதுபான பிராண்டுகளை செய்தியாளர்கள் முன் தெலுங்கு தேச எம்.எல்.ஏ. ராமமோகன் காட்டினார்.
இந்த நிலையில், ஆந்திர பிரதேச சிறப்பு முதன்மை செயலாளர் (கலால் மற்றும் வர்த்தக வரிகள்) ரஜத் பார்கவா செய்தியாளர்களிடம் கூறும்போது, சிறப்பு அமலாக்க பிரிவு தொடங்கி ஒன்றரை ஆண்டுகளில், சட்டவிரோத சாராய உற்பத்தியில் ஈடுபட்ட 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த பிரிவு நாடு முழுவதுமுள்ள அமைப்புகளில் ஒன்றாகும் என கூறினார்.
கடந்த 2 ஆண்டுகளில் சிறப்பு அமலாக்க பிரிவானது, சட்டவிரோத சாராய உற்பத்திக்கு பயன்பட கூடிய டன் கணக்கிலான கருப்பட்டிகளையும் அழித்துள்ளது.
ஆந்திர பிரதேச முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவின்பேரில் சட்டவிரோத சாராய உற்பத்தியில் ஈடுபடும் யாராக இருப்பினும் அவர்களுக்கு எதிராக நாங்கள் நடவடிக்கை எடுப்போம். யாரும் இதற்கு விதிவிலக்கல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story