இந்தியாவில் ஒமைக்ரான் அச்சுறுத்தல் நீங்கி விடவில்லை; மத்திய அரசு எச்சரிக்கை
இந்தியாவில் இருந்து ஒமைக்ரான் அச்சுறுத்தல் நீங்கி விடவில்லை என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்து உள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டு, கொரோனா பாதிப்புகள் பெரும் அளவில் பரவி முதல் அலையாக மக்களிடையே அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. அதன் தீவிரம் குறைவதற்குள், கடந்த 2021ம் ஆண்டு 2வது அலை தோன்றி அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி சென்றது. இதற்கு டெல்டா கொரோனா வகை அடிப்படையாக அமைந்திருந்தது. அதன்பின், டெல்டா பிளஸ், ஒமைக்ரான் ஆகிய வகைகளாலும் பாதிப்புகள் ஏற்பட்டன.
கடந்த ஆண்டு நவம்பரில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரசானது அதிவேக பரவல் கொண்டிருந்தது. எனினும், உயிரிழப்புகள் அதிக அளவில் இல்லை என தெரிவிக்கப்பட்டது. நாட்டில் கொரோனா பாதிப்புகள் சமீப காலங்களாக வெகுவாக குறைந்து வருகின்றன. இந்த நிலையில், கொரோனா 4வது அலை பற்றிய கணிப்புகள் வெளியிடப்பட்டன.
இதுபற்றி ஐ.ஐ.டி. கான்பூர் ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்தியாவில் கொரோனா 4வது அலையானது வருகிற ஜூன் 22ந்தேதி தொடங்கி அக்டோடபர் 24ந்தேதி வரை நீடிக்கும் என தெரிவித்தனர்.
எனினும், புதிய கொரோனா வகைகளின் வெளிப்படுதல் மற்றும் பூஸ்டர் டோஸ் உள்பட மக்களின் தடுப்பூசி நிலை ஆகியவற்றுக்கு ஏற்பவே 4வது அலையின் கடுமை அமையும். ஒருவேளை 4வது அலை பரவல் தோன்றினால், அது 4 மாதங்கள் வரை இருக்கும் என தெரிவித்தது.
இந்த அலையானது ஆகஸ்டு 15ந்தேதி முதல் ஆகஸ்டு 31ந்தேதி வரை உச்சமடையும். அதன்பின்னர் குறைய தொடங்கும் என ஆய்வாளர்கள் தெரிவித்தனர். நாட்டில் கொரோனா அலை பற்றி 3வது முறையாக ஐ.ஐ.டி. கான்பூர் கணித்து வெளியிட்டுள்ளது.
அவற்றில் குறிப்பிடும்படியாக, 3வது கொரோனா அலை பற்றி வெளியான கணிப்பு ஒரு சில நாட்கள் தள்ளி சென்றது தவிர்த்து, துல்லியமுடன் அமைந்திருந்தது. இந்தியாவில் நேற்று மாலை வரை 181.52 கோடி கொரோனா தடுப்பூசிகள் (1,81,52,45,644) செலுத்தப்பட்டு உள்ளன.
எனினும், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய சூழலை நிபுணர்கள் சுட்டி காட்டியுள்ளனர். நாட்டில் 4வது அலை தோன்றுவதற்கான சாத்தியங்கள் பற்றி நிபுணர்கள் கூறி வரும் சூழலில், இந்தியாவில் இருந்து ஒமைக்ரான் அச்சுறுத்தல் நீங்கி விடவில்லை என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்து உள்ளது.
இதுபற்றி மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணை செயலாளர் லவ் அகர்வால், உலகம் முழுவதும் 99 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசிகளை நாம் வழங்கி இருக்கிறோம். 145 நாட்களில் 25 கோடி டோஸ்களை செலுத்தி முடித்துள்ளோம்.
இதுவரை 181 கோடி டோஸ்களை செலுத்தி உள்ளோம் என தெரிவிப்பதில் பெருமை கொள்கிறேன் என கூறினார். தொடர்ந்து அவர், எனினும், ஒமைக்ரான் அச்சுறுத்தல் நாட்டில் இருந்து நீங்கி விடவில்லை.
ஆனால், நாட்டு மக்களின் விலை மதிப்பில்லா உயிர்களை காப்பதில் ஒட்டுமொத்த உலக கொரோனா மேலாண்மையுடன் ஒப்பிடும்போது, நாம் 23 மடங்கு வெற்றிகரமாக கையாண்டுள்ளோம் என்று அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story