அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளையும் விலக்க மத்திய அரசு முடிவு
கொரோனா பரவல் கட்டுக்குள் வந்த நிலையில் அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளையும் விலக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா தொற்று பெருமளவு குறைந்துள்ளது. இதையடுத்து கொரோனா கட்டுப்பாடுகளை முழுவதுமாக விலக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் மாநில அரசுகள் விதித்துள்ள கொரோனா கட்டுபாட்டு விதிகளை நீட்டிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட கொரோனா கட்டுப்பாடுகளை மாநில அரசுகள் நீக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் சுகாதாரத்துறையின் வழிகாட்டு நெறிமுறைகளான முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் உள்ளிட்டவற்றை பின்பற்ற வேண்டும். அதே போல் கொரோனா பரவல் இருக்கும் இடங்களில் கட்டுப்பாடுகளை நீக்குவது குறித்து மிகுந்த கவனம் தேவை எனவும், கொரோனா சூழலை கருத்தில் கொண்டு மத்திய உள்துறை அமைச்சகம் அவ்வபோது பிறப்பிக்கும் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை, கொரோனா தடுப்பூசி செலுத்துதல் உள்ளிட்டவற்றை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசு சார்பில் விதிக்கப்பட்டுள்ள கொரோனா கட்டுப்பாடுகள் மார்ச் 31 ஆம் தேதி முடிவடையும் நிலையில், அதன் பிறகு புதிய உத்தரவுகள் பிறப்பிக்கப்படாது என மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story