மே.வங்காளத்தில் 8 பேர் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம்; கொல்கத்தா ஐகோர்ட்டில் இன்று விசாரணை!
மேற்குவங்காள மாநிலத்தில் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டு 8 பேர் பலியான சம்பவத்தில் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது தேசிய மகளிர் ஆணையம்.
கொல்கத்தா,
மேற்கு வங்காள மாநிலம் பீர்பூம் மாவட்டம் ராம்பூர்ஹத்தில் உள்ள பர்ஷல் கிராமத்தின் துணைத் தலைவராக இருந்தவர் பாது ஷேய்க். இவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் வந்த நான்கு பேர் ஷேய்க் மீது வெடிகுண்டு வீசி பயங்கர தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த பாது ஷேய்க் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது உடல் சொந்த ஊரான போக்டுய் கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டது.
இவரது கொலை காரணமாக அந்த கிராமத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. ஒரு கும்பல் வன்முறையில் ஈடுபட்டது. போக்டுய் கிராமத்தில் உள்ள வீடுகளை சூறையாடிய நிலையில், ஆத்திரமடைந்த கும்பல் பல வீடுகளுக்கு தீ வைத்தது, அதில் 8 பேர் உயிருடன் எரித்து கொல்லப்பட்டனர் என்று உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில், மேற்குவங்காள மாநிலத்தில் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டு 8 பேர் பலியான சம்பவத்தில் தாமாக முன்வந்து தேசிய மகளிர் ஆணையம் வழக்குப்பதிவு செய்துள்ளது. இதுதொடர்பாக, 24 மணி நேரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய டிஜிபி, பீர்பூம் மாவட்ட எஸ்.பி.க்கு மகளிர் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும்,பீர்பூம் வன்முறை சம்பவம் தொடர்பாக கொல்கத்தா ஐகோர்ட்டும் தாமாக முன்வந்து வழக்குபதிவு செய்துள்ளது.கொல்கத்தா ஐகோர்ட் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு இன்று பிற்பகல் இந்த வழக்கு மீதான விசாரணையை மேற்கொள்கிறது.
Related Tags :
Next Story