ஐதராபாத் தீ விபத்தில் 11 பீகார் மாநில தொழிலாளர்கள் பலி; பிரதமர் மோடி இரங்கல் - ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர ராவ், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணத் தொகையாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
ஐதராபாத்,
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் மாவட்டம் பொஹிகுடா பகுதியில் உள்ள ஒரு கடையின் குடோனில் இன்று அதிகாலை 4 மணியளவில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இந்த கடையின் குடோனில் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் நிறைய இருந்தன. மேலும், இந்த கடையில் வேலை செய்து வரும் பீகார் மாநில தொழிலாளர்கள் 12 பேர் குடோனிலேயே தங்கி வந்தனர்.
அதிகாலை என்பதால் தொழிலாளர்கள் 12 பேரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்துள்ளனர். இதனால் தொழிலாளர்கள் 11 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயங்களுடன் ஒரே ஒரு தொழிலாளி உயிருடன் மீட்கப்பட்டார். அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த தீவிபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர். குடோனில் ஏற்பட்ட மின்கசிவே இந்த தீ விபத்து ஏற்பட காரணமாக இருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், தீ விபத்தில் 11 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “ஐதராபாத்தில் உள்ள போய்குடாவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 11 பேர் உயிர் இழந்தது வேதனை அளிக்கிறது. துயரமான இந்த தருணத்தில் என் எண்ணமும் மனமும் உயிரிழந்தவர்களை பிரிந்து வாடும் குடும்பங்களுடன் உள்ளது. இறந்தவர்களின் குடும்பத்துக்கு பிரதம மந்திரி தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சம் கருணைத் தொகையாக வழங்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர ராவ், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணத் தொகையாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
Related Tags :
Next Story