முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு பிரச்சினைக்கு புதிய அணையே நிரந்தர தீர்வு - கேரள அரசு
முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைக்கு புதிய அணையே நிரந்தர தீர்வாக அமையும் என சுப்ரீம் கோர்ட்டில் கேரள அரசு வாதிட்டு உள்ளது.
புதுடெல்லி,
முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு தொடர்பான ரிட் மனுக்கள் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான அமர்வு முன் தொடங்கியது.
கேரள அரசின் சார்பில் மூத்த வக்கீல் ஜெய்தீப் குப்தா முன்வைத்த வாதங்கள் வருமாறு:-
முல்லைப் பெரியாறு அணையில் நீரைத் தேக்கி வைக்கும் அளவை அதிகரிக்க மத்திய அரசு அமைத்த நிபுணர் குழு அளித்த பரிந்துரை விவாதமாகி உள்ளது.
முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக இல்லை. முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு அதில் தேக்கி வைக்கப்படும் நீரின் அளவைப் பொறுத்து உள்ளது. அணையில் அதிக அளவிலான நீர் தேக்கி வைக்கப்படுகிறது. இந்த விவகாரம் நீர் பங்கீடு தொடர்புடையதல்ல. அணை பாதுகாப்பு தொடர்புடையது.
தமிழகம், கேரளத்தைச் சேர்ந்த தொழில்நுட்பம் சார்ந்த உறுப்பினர்களை கொண்டு முல்லைப் பெரியாறு அணையின் கண்காணிப்புக் குழுவை மாற்றி அமைக்க வேண்டும்.
இந்த விவகாரத்துக்கு நிரந்தர தீர்வு காண புதிய அணை கட்டுவதே கேரள அரசின் நிலைப்பாடாக உள்ளது. ஆனால் புதிய அணை கட்டுவதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்கிறது. புதிய அணை கட்டுவது தொடர்பாக கேரள சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றப்பட்டு உள்ளது என வாதிட்டார்.
வாதங்களைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் ரிட் மனுக்கள் மீதான விசாரணையை நாளைக்கு [இன்றைக்கு] தள்ளிவைத்தனர்.
முன்னதாக கேரள அரசு தாக்கல் செய்த பதில் மனுவுக்கு தமிழக அரசின் சார்பில் விளக்க மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், முல்லைப் பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு, ரூ.9.81 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது.
ஆனால் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள தேவையான பொருட்களை எடுத்து செல்ல கேரள அரசு அனுமதிக்கவில்லை. கேரள அரசு அனுமதிக்கும் பட்சத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.
பத்தாண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்பட வேண்டிய அணை பாதுகாப்பு மீளாய்வு மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது. நிபுணர் குழு பரிந்துரையின்படி அணையை பலப்படுத்த வேண்டிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
2021-ம் ஆண்டு சட்டத்தின்படி, முல்லைப் பெரியாறு அணையின் உரிமையாளராக உள்ள தமிழக அரசு அணையின் பாதுகாப்பை 2020-ம் ஆண்டுக்குள் மீளாய்வு செய்ய வேண்டும். இதற்காக கொண்டு செல்லப்படும் பொருட்களை அனுமதிக்க கேரள அரசு ஒத்துழைப்பு அளிக்க உத்தரவிட வேண்டும் என விளக்கம் மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story