உத்தரபிரதேச முதல்-மந்திரியாக யோகி ஆதித்யநாத் இன்று பதவியேற்பு..!


உத்தரபிரதேச முதல்-மந்திரியாக யோகி ஆதித்யநாத் இன்று பதவியேற்பு..!
x
தினத்தந்தி 25 March 2022 5:54 AM IST (Updated: 25 March 2022 5:54 AM IST)
t-max-icont-min-icon

உத்தரபிரதேச முதல்-மந்திரியாக யோகி ஆதித்யநாத் இன்று (வெள்ளிக்கிழமை) பதவியேற்கிறார். இந்த விழாவில் பிரதமர் மோடி, அமித்ஷா உள்பட பலர் பங்கேற்கின்றனர்.

லக்னோ,

உத்தரபிரதேசத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 403 தொகுதிகளில் பா.ஜனதா கூட்டணி 273 இடங்களை கைப்பற்றி ஆட்சியை தக்க வைத்தது.

இதைத்தொடர்ந்து உத்தரபிரதேச முதல்-மந்திரியாக இன்று (வெள்ளிக்கிழமை) யோகி ஆதித்யநாத் தொடர்ந்து 2-வது முறையாக பதவியேற்கிறார். லக்னோவில் உள்ள அடல் பிகாரி வாஜ்பாய் கிரிக்கெட் மைதானத்தில் மாலை 4 மணிக்கு இந்த விழா நடைபெறுகிறது.

இதில் யோகி ஆதித்யநாத்துக்கு கவர்னர் ஆனந்தி பென் படேல் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் மற்றும் பா.ஜனதா ஆளும் மாநிலங்களின் முதல்-மந்திரிகள் பங்கேற்கின்றனர்.

இதைத்தவிர ஏராளமான தொழில் அதிபர்களும் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானி உள்பட 60 தொழிலதிபர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

இதைப்போல அயோத்தி, மதுரா மற்றும் வாரணாசியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட சாதுக்களுக்கு யோகி ஆதித்யநாத் தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுத்து உள்ளார்.

மேலும் மாநிலத்தின் பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்களுக்கும் இந்த பதவியேற்பு விழா அழைப்பிதழ் அனுப்பப்பட்டு உள்ளது. ஆனால் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கப்போவது இல்லை என அகிலேஷ் யாதவ் அறிவித்து உள்ளார்.

இதற்கிடையே யோகி ஆதித்யநாத் பதவியேற்பு விழாவுக்காக வாஜ்பாய் கிரிக்கெட் மைதானம் 50 ஆயிரம் பேர் அமரும் வகையில் மிகவும் பிரமாண்டமாக தயார்படுத்தப்பட்டு உள்ளது. மைதானத்துக்கு செல்லும் சாலைகள் அனைத்தும் மின் விளக்குகளால் ஒளியூட்டப்பட்டு இருக்கிறது. மேலும் பார்க்கும் இடமெல்லாம் பிரதமர் மோடி, அமித்ஷா மற்றும் யோகி ஆதித்யநாத்தின் முழு உருவ கட் அவுட்டுகளாக காட்சியளிக்கின்றன.

யோகி ஆதித்யநாத் பதவியேற்பு விழாவுக்கு பிரதமர் மற்றும் பல்வேறு மத்திய மந்திரிகள் வருவதால் லக்னோ முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

Next Story