மந்தகதியில் இந்திய-சீன எல்லை பேச்சுவார்த்தை- மத்திய வெளியுறவு மந்திரி
எல்லையில் படைகளை குறைப்பது, வாபஸ் பெறுவது ஆகியவையே பேச்சுவார்த்தையின் முக்கிய அம்சங்களாக இருந்தன என மத்திய மந்திரி ஜெய்சங்கர் பேட்டியில் கூறியுள்ளார்.
புதுடெல்லி,
இந்தியா, சீனா இடையேயான எல்லை விவகாரம் நீண்டகாலம் ஆகவே தொடர்ந்து வருகிறது. கடந்த 2020ம் ஆண்டு ஜூன் மாதம் 15ந்தேதி லடாக் எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன படைகள் ஆயுதங்களுடன் அதிரடியாய் வந்து இந்திய வீரர்களுடன் கடுமையாக மோதலில் ஈடுபட்டனர்.
இந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பில் 4 பேர் பலியானார்கள் என அந்நாடு ஒப்புக்கொண்டது. இந்த நிகழ்வின்போது பின்வாங்கி ஓடிய சீன படைகளில் 38 பேர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தனர் என்பது பின்னர் தெரிய வந்தது.
அதில் இருந்து எல்லையில் அசல் கட்டுப்பாட்டு கோடு அருகில் இரு தரப்பினரும் தலா 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படையினரை குவித்துள்ளனர். இதனால் அங்கு எப்போதும் பதற்றம் நிலவி வருகிறது.
ஆனாலும், மோதல்கள் உண்டாக வாய்ப்பு உள்ள பகுதிகளில் இருந்து படைகளை திரும்ப பெறுவது தொடர்பாக ராணுவ மட்டத்திலான இரு தரப்பு பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டு வருகிறது.
15வது சுற்று பேச்சுவார்த்தை, இந்திய தரப்பில் உள்ள சுசூல் மோல்டோ எல்லை சந்திப்பில் நடந்து முடிந்தது. படைகள் வாபஸ் பெறப்பட வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியதுடன், கிழக்கு லடாக்கில் பதற்றத்தை குறைக்கவும் இந்தியா அழுத்தம் கொடுத்தது.
இதன் ஒரு பகுதியாக, இந்திய வெளியுறவு துறை மந்திரி எஸ். ஜெய்சங்கர் இன்று சீன வெளியுறவு துறை மந்திரி வாங் யீ-ஐ சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு 3 மணிநேரம் வரை நடந்தது. இதன்பின்பு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய வெளியுறவு துறை மந்திரி, இந்திய-சீன உறவில் வளர்ச்சிக்கான பணிகள் நடந்து வருகின்றன. விரும்பியதற்கு பதிலாக முன்னேற்றம் மந்தகதியில் நடந்து வருகிறது என கூறினார்.
கடந்த 2020ம் ஆண்டு ஏப்ரல் முதல், சீன படையெடுப்புகளால் எழுந்த மோதல்கள், பதற்றங்கள் ஆகியவற்றால் இரு தரப்புக்கும் இடையே ஒரு சாதாரண உறவு ஏற்படவில்லை. அமைதியை மீட்டெடுப்பது பற்றி, பேச்சுவார்த்தையில் முழு அளவில் வெளிப்படுத்த வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
இந்தியா-சீனா இடையேயான உறவு இன்று சாதாரணமாக இருக்கிறதா? என நீங்கள் என்னிடம் கேட்டால், எனது பதில் இல்லை. இது சாதாரணமாக இல்லை என்பதே. (சீன படையெடுப்புகளை குறிப்பிட்டு). இந்த விவகாரம் முழு அளவில் தீர்க்கப்பட வேண்டும் என்பதே இன்றைய எங்களுடைய முயற்சி என்று அவர் கூறினார்.
எல்லையில் அமைதி சீர்குலைந்த சூழ்நிலையே நம்மிடையே உள்ளது. லடாக்கில், இன்னும் மோதல் பகுதிகள் உள்ளன. ஆனால், மற்ற பகுதிகளில் முன்னேற்றம் உள்ளது.
இதனை எப்படி முன்னெடுத்து செல்வது என்பது பற்றியே எங்களுடைய இன்றைய விவாதம் இருந்தது. எல்லை பகுதிகளில் மிக அதிக அளவில் பாதுகாப்பு படைகள் குவிக்கப்பட்டு இருக்கும் வரை, எல்லை பகுதியின் நிலைமை நிச்சயம் சாதாரணமாக இருக்காது. எல்லையில் அசாதாரண சூழ்நிலையே உள்ளது என அவர் கூறினார்.
இதேபோன்று, தற்போதுள்ள நிலையை ஒரு தலைப்பட்சமாக மாற்றும் முயற்சிகள் இருக்கக்கூடாது. இருதரப்பு உறவானது, பரஸ்பர மரியாதை, பரஸ்பர உணர்வுதிறன் மற்றும் பரஸ்பர விருப்பம் ஆகிய 3 பரஸ்பர விசயங்களை சார்ந்தது என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த விவாதத்தில் உக்ரைன் போர் குறித்தும், இந்திய மற்றும் சீன வெளியுறவு மந்திரிகள் ஆலோசனை மேற்கொண்டனர்.
Related Tags :
Next Story