இந்திய பத்திரிகை அதிபர்கள் சங்கத்தின் புகாரின் பேரில் ‘கூகுள்’ நிறுவனம் மீது இந்திய போட்டி ஆணையம் விசாரணை
இந்திய பத்திரிகை அதிபர்கள் சங்கத்தின் புகாரின் பேரில் ‘கூகுள்’ நிறுவனத்துக்கு எதிராக இந்திய போட்டி ஆணையம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி,
இந்திய பத்திரிகை அதிபர்கள் சங்கத்தின் (ஐ.என்.எஸ்.) பொது செயலாளர் மேரி பால் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
இந்திய செய்தி ஊடகங்கள், தங்கள் வாடிக்கையாளர்களுக்காக நாட்டு நடப்புகளை செய்திகளாக உருவாக்குகின்றன. அவை இணையதளத்தில் மின்னணு வடிவத்தில் கிடைக்கின்றன. ‘கூகுள்’ போன்ற தேடுபொருளை பயன்படுத்தி, அந்த செய்திகளை வாடிக்கையாளர்கள் அறிந்து கொள்கிறார்கள். மேற்கோள் காட்டவும் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.
செய்திகளை உருவாக்க ஊடகங்கள் ஏராளமான பணம் முதலீடு செய்கின்றன. இருப்பினும், அந்த செய்திக்கு உரிய பணத்தை ‘கூகுள்’ நிறுவனம் அளிப்பது இல்லை. இத்தகைய செய்திகளை பயன்படுத்துவதற்காக, சம்பந்தப்பட்ட ஊடகங்களுக்கு ‘கூகுள்’ உள்ளிட்ட நிறுவனங்கள் போதிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஸ்பெயின் போன்ற பல்வேறு நாடுகள் சட்டம் இயற்றி உள்ளன.
விளம்பர வருவாய்
மேலும், ‘கூகுள்’ நிறுவனம் தான் விளம்பரங்கள் மூலம் ஈட்டிய மொத்த வருவாய் பற்றியோ, அதில் செய்தி ஊடக நிறுவனங்களுக்கு எத்தனை சதவீத பணம் கொடுக்கிறது என்பது பற்றியோ செய்தி ஊடக நிறுவனங்களுக்கு தெரிவிப்பது இல்லை. எனவே, ‘கூகுள்’ நிறுவனத்துக்கு எதிராக இந்திய போட்டி ஆணையத்தில் (சி.சி.ஐ.) இந்திய பத்திரிகை அதிபர்கள் சங்கம் புகார் மனு தாக்கல் செய்துள்ளது.
அதில், கூகுள் இந்தியா, அதன் தாய் நிறுவனம், துணை நிறுவனங்கள் ஆகியவை செய்தி மற்றும் விளம்பர சேவை தொடர்பாக தங்கள் மேலாதிக்க நிலையை தவறாக பயன்படுத்தி வருவதாகவும், இது போட்டி சட்டம்-2002-ன் 4-வது பிரிவை மீறிய செயல் என்றும் கூறியுள்ளது.
விசாரணைக்கு உத்தரவு
இந்திய பத்திரிகை அதிபர்கள் சங்கத்தின் புகாரை ஆராய்ந்த இந்திய போட்டி ஆணையம், இது போட்டி சட்டம்-2002-ஐ மீறிய செயல் என்பதற்கு முகாந்திரம் இருப்பதை கண்டறிந்தது. எனவே, இந்திய போட்டி ஆணையம் இந்த புகார் குறித்து விரிவான விசாரணை நடத்துமாறு தனது தலைமை இயக்குனருக்கு உத்தரவிட்டது. மேலும், இந்திய பத்திரிகை அதிபர்கள் சங்கம் தாக்கல் செய்த புகாரையும், மின்னணு செய்தி வெளியீட்டாளர்கள் சங்கம் (டி.என்.பி.ஏ.) தாக்கல் செய்த புகாரையும் ஒன்றாக இணைக்குமாறு உத்தரவிட்டது.
இந்திய பத்திரிகை அதிபர்கள் சங்கம் தனது உறுப்பினர்களுக்கும், இதர செய்தி வெளியீட்டாளர்களுக்கும் செய்திக்கான உரிய இழப்பீட்டை பெற்றுத்தர பாடுபட்டு வருகிறது. இதற்கு பணம் அளிக்கும் முறையை விரைந்து அமல்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு மேரி பால் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story