வெளிநாட்டுவாழ் இந்தியர்களுக்கு ஆன்லைன் ஓட்டுரிமை - மத்திய அரசு பரிசீலனை
வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைப்பது, வெளிநாடுகளில் பணியாற்றும் இந்தியர்களுக்கு ஆன்லைன் ஓட்டுரிமை வழங்குவது ஆகியவை குறித்து பரிசீலித்து வருவதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கூறியது.
புதுடெல்லி,
நாடாளுமன்ற மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜு கூறியதாவது:-
தேர்தலில் கள்ள ஓட்டு என்பது தீவிரமான பிரச்சினை. கள்ள ஓட்டை தடுப்பது குறித்து மத்திய சட்ட மந்திரி அளவில் பரிசீலனை நடந்து வருகிறது. வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பது அந்த வழிமுறைகளில் ஒன்று. வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பது தற்போதைய நிலையில் விருப்பத்தின்பேரில்தான் உள்ளது.
வாக்காளர் பட்டியலில் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பெயர் இருப்பது, கள்ள ஓட்டு ஆகியவற்றை தடுக்க ‘ஒரே நாடு ஒரே வாக்காளர் பட்டியல்’ முறையை கொண்டுவருவதுதான் எங்கள் நோக்கம்.
வெளிநாடுகளில் பணியாற்றும் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை அளிப்பது எப்படி என்பது குறித்து ஆராயுமாறு தேர்தல் கமிஷனை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. ஆன்லைனில் ஓட்டு போட அனுமதிப்பது பற்றி பரிசீலனை நடந்து வருகிறது.
ஆனால், எந்த முடிவாக இருந்தாலும், அது ஒளிவுமறைவின்றி, பாதுகாப்பானதாக இருப்பதை உறுதி செய்ய வேண்டி உள்ளது. இந்திய தேர்தல் முறையை உலகமே பாராட்டுகிறது. அதிகமான ஓட்டுப்பதிவு நடக்க வேண்டும் என்று மத்திய அரசு விரும்புகிறது. அதற்காக ஓட்டு போடுவதை கட்டாயமாக்குவதற்கு சட்டம் கொண்டு வரும் திட்டம் எதுவும் பரிசீலனையில் இல்லை.
ஜெயிலில் இருப்பவர்களை ஓட்டுப்போடுமாறு மத்திய அரசு வற்புறுத்த முடியாது. ஏனென்றால் அவர்கள் கோர்ட்டின் அதிகாரவரம்புக்குள் இருப்பவர்கள்.
இவ்வாறு கிரண் ரிஜிஜு கூறினார்.
Related Tags :
Next Story