உ.பி: யோகி ஆதித்யநாத் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்
உத்தரப்பிரதேச முதல் மந்திரியாக பதவியேற்றுள்ள யோகி ஆதித்யநாத் தலைமையிலான அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெறுகிறது.
லக்னோ,
உத்தரபிரதேசத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 403 தொகுதிகளில் பா.ஜனதா கூட்டணி 273 இடங்களை கைப்பற்றி ஆட்சியை தக்க வைத்தது.
உத்தரபிரதேச முதல்-மந்திரியாக நேற்று யோகி ஆதித்யநாத் தொடர்ந்து 2-வது முறையாக பதவியேற்றார் . யோகி ஆதித்யநாத்துக்கு கவர்னர் ஆனந்தி பென் படேல் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். லக்னோவில் உள்ள அடல் பிகாரி வாஜ்பாய் கிரிக்கெட் மைதானத்தில் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது .இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் ஆகியோர் பங்கேற்றனர்.
இதனை தொடர்ந்து யோகி ஆதித்யநாத் தலைமையிலான ஆட்சியில் 24 புதிய மந்திரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். முந்தைய ஆட்சியில் மந்திரிகளாக இடம் பெற்றிருந்த 24 பேர் இம்முறை நீக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் தினேஷ் சர்மா, சதீஷ் மஹானா, அசுதோஷ் டாண்டன், ஸ்ரீகாந்த் சர்மா, சித்தார்த் நாத் சிங் உள்ளிட்டோர் அடங்குவர்.
இந்த நிலையில் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் தலைமையிலான அமைச்சரவை கூட்டம் லக்னோவில் உள்ள லோக் பவனில் இன்று காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து யோகி ஆதித்யநாத், காலை 11 மணிக்கு ராஜ்பவனில் நடக்கும் தற்காலிக சபாநாயகர் பதவியேற்பு விழாவிலும் அவர் பங்கேற்கிறார்.
மேலும் தலைமைச் செயலாளர்கள், முதன்மைச் செயலாளர்கள் மற்றும் அனைத்து உயர் அதிகாரிகளுடன் காலை 11:30 மணிக்கு லக்னோவின் யோஜனா பவனில் உரையாற்றுகிறார்.
Related Tags :
Next Story