வகுப்பறையில் ஹிஜாப்புடன் மாணவி தொழுகை; வெடித்தது அடுத்த சர்ச்சை


வகுப்பறையில் ஹிஜாப்புடன் மாணவி தொழுகை; வெடித்தது அடுத்த சர்ச்சை
x
தினத்தந்தி 26 March 2022 9:16 PM IST (Updated: 26 March 2022 9:16 PM IST)
t-max-icont-min-icon

மத்திய பிரதேசத்தில் பல்கலை கழக வகுப்பறையில் ஹிஜாப் அணிந்து மாணவி ஒருவர் தொழுகையில் ஈடுபட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.



போபால்,



மத்திய பிரதேசத்தின் ஹரிசிங் கவுர் சாகர் பல்கலை கழகத்தின் வகுப்பறையில் ஹிஜாப் அணிந்த முஸ்லிம் மாணவி ஒருவர் தொழுகையில் ஈடுபடும் வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டன.  இதனால் சர்ச்சை வெடித்தது.

அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி இந்து அமைப்புகள் சார்பில் கோரிக்கை வலுத்தன.  இதுபற்றி துணைவேந்தர் நீலிமா குப்தா கூறும்போது, இதுபற்றி விசாரிக்க குழு ஒன்று அமைத்துள்ளோம்.  மத வழிபாடுகளை மாணவ மாணவியர்கள் வீட்டிலேயே கடைப்பிடிக்க கேட்டு கொண்டுள்ளோம்.  பல்கலை கழகம் படிப்பதற்காக உள்ளது என்று கூறியுள்ளார்.

5 பேர் கொண்ட குழுவானது 3 நாட்களில் அறிக்கை சமர்ப்பிக்கும்.  அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என பல்கலை கழகத்தின் பதிவாளர் சந்தோஷ் ஷகவுரா கூறியுள்ளார்.

இந்த பல்கலை கழகத்தின் வளாகத்திற்குள் அணிவதற்கு என்று முறையான சீருடை விதிகள் எதுவும் இல்லை.  என்றாலும், மாணவர்கள் வகுப்புகளுக்கு வரும்போது, எதிர்மறை தாக்கம் ஏற்படுத்திடாத உடைகளை அணிந்து வரவேண்டும் என பல்கலை கழகத்தின் ஊடக உயரதிகாரி விவேக் ஜெய்ஸ்வால் கூறியுள்ளார்.

கர்நாடகாவில் வகுப்பறைகளில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்த அரசின் உத்தரவுக்கு கர்நாடக ஐகோர்ட்டு ஆதரவு தெரிவித்தது.  அதற்கு எதிரான மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.  இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது.

இந்நிலையில், மத்திய பிரதேசத்தில் பல்கலை கழகம் ஒன்றில் வகுப்பறையில் ஹிஜாப் அணிந்து மாணவி ஒருவர் தொழுகையில் ஈடுபட்டு உள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.


Next Story