இந்தியாவிலேயே முதல் முறையாக ஸ்டீல் கழிவுகளால் அமைந்த சாலை


இந்தியாவிலேயே முதல் முறையாக ஸ்டீல் கழிவுகளால் அமைந்த சாலை
x
தினத்தந்தி 26 March 2022 9:59 PM IST (Updated: 26 March 2022 9:59 PM IST)
t-max-icont-min-icon

குஜராத்தின் சூரத் நகரில் ஸ்டீல் கழிவு பொருட்களை கொண்டு 1 கி.மீ. தொலைவுக்கு சாலை ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது.



புதுடெல்லி,



நாடு முழுவதுமுள்ள பல்வேறு ஆலைகளில் இருந்து ஒவ்வோர் ஆண்டும் 1.9 கோடி டன் எஃகு கழிவுகள் வெளியேறுகின்றன.  அவை நிலத்தில் வீணாக கிடப்பதற்கு பதிலாக அவற்றை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வின் ஒரு பகுதியாக, உருவான இதுபோன்ற முதல் திட்டத்தின் கீழ், குஜராத்தின் சூரத் நகரில் ஹசிரா தொழிற்பேட்டையில் எஃகு கழிவுகளை கொண்டு சாலை அமைக்கப்பட்டது.

எஃகு துறை அமைச்சகம் மற்றும் கொள்கை ஆணையம் மற்றும் நிதி ஆயோக் ஆகியவற்றின் உதவியுடன் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (சி.எஸ்.ஐ.ஆர்.) மற்றும் மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவனம் (சி.ஆர்.ஆர்.ஐ.) இதற்கு நிதியுதவி செய்தது.  இந்த திட்டம் ஆனது மத்திய அரசின், கழிவுகளில் இருந்து வளம் மற்றும் தூய்மை இந்தியா ஆகிய திட்டங்களுக்கு வலு சேர்த்து உள்ளது.

இந்த முன்னோடி சாலை திட்டம் 1 கிலோ மீட்டர் நீளத்திற்கு, 6 வழி நெடுஞ்சாலையாக அமைக்கப்படுகிறது.  வழக்கம்போல் பயன்படுத்தும் பிற பொருட்களுக்கு பதிலாக, 100 சதவீதம் எஃகு பொருட்களை பயன்படுத்தியே இந்த சாலை உருவாக்கப்படுகிறது.  சாலையின் தடிமனும் 30 சதவீதம் குறைக்கப்பட்டு உள்ளது.  இதனால், பருவ காலங்களில் ஏற்படும் சேதத்தில் இருந்து இந்த புதிய முறையானது சாலைகளை பாதுகாக்கும் என நம்பப்படுகிறது.

இந்த சாலையானது இதற்கு முன்பு பல டன் எடையை ஏற்றி சென்ற லாரிகளால் மோசமடைந்து இருந்தது.  ஆனால் இந்த சாலையை எஃகு கழிவுகளால் அமைத்தபோது 1,000க்கும் மேற்பட்ட லாரிகள், தினமும் 18 முதல் 30 முறை பல டன் எடையுடன் கடந்து சென்றும் சாலை பாதிப்படையாமல் உள்ளது என சி.ஆர்.ஆர்.ஐ.யின் தலைமை விஞ்ஞானி சதீஷ் பாண்டே கூறியுள்ளார்.

இந்த பரிசோதனையால், நெடுஞ்சாலைகள் மற்றும் பிற சாலைகள் வலுவடைவதுடன், செலவும் 30 சதவீதம் குறையும் என்று அவர் கூறியுள்ளார்.

இந்தியா முழுவதும் உள்ள எஃகு ஆலைகள் ஆண்டொன்றுக்கு 1.9 கோடி டன் எஃகு கழிவுகளை வெளியேற்றுகின்றன.  ஒரு மதிப்பீட்டின்படி, வருகிற 2030ம் ஆண்டிற்குள் 5 கோடி டன்களாக இது உயர கூடும்.

இதுபோன்ற முன்னோடி திட்டத்தின் வெற்றியால், நெடுஞ்சாலை உருவாக்க பணிகளில் இந்த எஃகு கழிவுகளை பயன்படுத்தி வருங்காலத்தில் வலிமையான சாலைகளை அமைப்பதற்கு மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.


Next Story