இந்தியாவின் வலிமை ஒவ்வொரு குடிமகனின் ஆற்றலில் உள்ளது; இலவச ரேசன் திட்டத்தினை நீட்டித்த பிரதமர் மோடி
பிரதம மந்திரி கரீப் கல்யாண் யோஜனா திட்டம் அடுத்த 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது என பிரதமர் அறிவித்து உள்ளார்.
புதுடெல்லி,
நாடு முழுவதும் கடந்த 2020ம் ஆண்டு கொரோனா பெருந்தொற்று பரவி மக்களுக்கு பெரும் பாதிப்பினை ஏற்படுத்தியது. இதனால், பொருளாதார நெருக்கடி, வருவாயின்மை ஆகியவற்றால் மக்கள் அவதியடைந்தனர். இதனை முன்னிட்டு கோடிக்கணக்கான மக்களை பாதுகாக்கும் வகையில், பிரதம மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா என்ற திட்டம் மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்டது.
தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கிடைக்கும் உணவு தானியத்துடன் இந்த திட்டத்தினால், ஒரு வீட்டுக்கு ஒரு மாதத்திற்கு கூடுதலாக 5 கிலோ உணவு தானியம் கிடைக்கப்பெறும்.
இந்த திட்டம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது. கடைசியாக, கடந்த ஆண்டு நவம்பரில் அடுத்த 4 மாதங்களுக்கு திட்டம் நீட்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன்படி, 2022ம் ஆண்டு மார்ச் வரை இது அமலில் இருக்கும். இந்நிலையில், இந்த திட்டத்தினை அடுத்த 6 மாதங்களுக்கு நீட்டித்து பிரதமர் உத்தரவிட்டு உள்ளார்.
இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், இந்தியாவின் வலிமை ஒவ்வொரு குடிமகனின் ஆற்றலில் உள்ளது. இந்த ஆற்றலை வலுப்படுத்த, பிரதம மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தினை வருகிற செப்டம்பர் வரையிலான 6 மாதத்திற்கு தொடர்வது என அரசு முடிவு செய்துள்ளது. இதனால், முன்புபோல் 80 கோடிக்கும் கூடுதலான நாட்டு மக்கள் பயனடைவார்கள் என்று அவர் தெரிவித்து உள்ளார்.
உத்தர பிரதேசத்தில் இலவச ரேசன் திட்டம் அடுத்த 3 மாதங்களுக்கு நீட்டிப்பு செய்யப்படும் என 2வது முறையாக முதல்-மந்திரியாக பொறுப்பேற்ற பின்னர் யோகி ஆதித்யநாத் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். இந்நிலையில், மத்திய அரசின் அறிவிப்பு வெளிவந்து உள்ளது.
வருகிற 31ந்தேதியில் இருந்து கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் அனைத்தும் திரும்ப பெறப்படுகின்றன என மத்திய அரசு அறிவித்த நிலையில், இந்த முடிவு முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதற்கு கூடுதலாக ரூ.80 ஆயிரம் கோடி செலவாகும். இதனால், கொரோனா பெருந்தொற்று காலத்திற்கு பின்னர், இந்த திட்டத்திற்காக மொத்தம் 3.4 லட்சம் கோடி அரசு செலவு செய்துள்ளது.
Related Tags :
Next Story