சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவின் வெற்றி, பிரதமர் மோடி மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை காட்டுகிறது - அமித்ஷா


சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவின் வெற்றி, பிரதமர் மோடி மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை காட்டுகிறது - அமித்ஷா
x
தினத்தந்தி 27 March 2022 5:18 AM IST (Updated: 27 March 2022 5:18 AM IST)
t-max-icont-min-icon

சட்டசபை தேர்தலில் பா.ஜனதா பெற்ற வெற்றி, பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை காட்டுவதாக உள்துறை மந்திரி அமித்ஷா கூறியுள்ளார்.

சட்டசபை தேர்தலில் வெற்றி

உள்துறை மந்திரி அமித்ஷா தனது நாடாளுமன்ற தொகுதியான காந்திநகரில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்ததுடன், பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல்லும் நாட்டினார்.

பின்னர் அங்கு கூடியிருந்த பொதுமக்கள் மத்தியில் அவர் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

5 மாநில சட்டசபை தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருந்ததால், எனது தொகுதிக்கு நீண்ட நாட்களுக்கு பின்னரே வர முடிந்துள்ளது. இந்த தேர்தலில் 4 மாநிலங்களில் பா.ஜனதா வெற்றி பெற்றுள்ளது.

உத்தரபிரதேசம், கோவா, மணிப்பூர் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் பா.ஜனதா பெற்ற வெற்றி, பிரதமர் மோடியின் தலைமை மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை காட்டுகிறது.

காங்கிரசை பார்க்க முடியவில்லை

பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய அரசின் கொள்கைகள் மற்றும் திட்டங்களை மக்கள் ஏற்றுக்கொண்டதையே பா.ஜனதாவின் இந்த பிரமாண்ட வெற்றி காட்டுகிறது.

இந்தியாவை பாதுகாப்பான, வளமான மற்றும் சக்திவாய்ந்ததாக மாற்ற நரேந்திர மோடி மேற்கொண்ட பிரசாரத்திற்கு பொதுமக்களின் ஒப்புதல் முத்திரையே இந்த பிரமாண்ட வெற்றியாகும்.

அதேேநரம் இந்த மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி துடைத்து எறியப்பட்டு விட்டது. அதை எங்கும் பார்க்க முடியவில்லை.

மருத்துவக்கல்லூரிகள்

பிரதமர் மோடி, குஜராத்தில் முதல்-மந்திரியாக இருந்தபோது, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்காக அயராது உழைத்தார். ஏழைகள், விவசாயிகள் மற்றும் தொழிற்சாலை ஊழியர்கள் என அனைத்து பிரிவினரின் ஆரோக்கியத்தை குறித்தும் கவலைப்பட்டார்.

குஜராத்தில் 2017-ம் ஆண்டு வரை 10 மருத்துவக்கல்லூரிகளே இருந்தன. தற்போது இது 40 ஆக உயர்ந்திருக்கிறது. 2024-ம் ஆண்டுக்குள் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு மருத்துவக்கல்லூரி என்ற நிலை எட்டப்படும்.

இவ்வாறு அமித்ஷா கூறினார்.

காஷ்மீர் பைல்ஸ்

ஆமதாபாத் மாநகராட்சி சார்பில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது காஷ்மீர் பைல்ஸ் சினிமா குறித்து அமித்ஷா குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் கூறும்போது, ‘காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்தை இதுவரை பார்க்காதவர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டும். காங்கிரஸ் ஆட்சியின்போது காஷ்மீரில் எப்படி அட்டூழியங்களும், பயங்கரவாதமும் நடந்தன? என்பதை அறிந்து கொள்ள வேண்டும்’ என்று தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், ‘நரேந்திர மோடியை 2-வது முறையாக நீங்கள் பிரதமராக தேர்ந்தெடுத்தபோது, காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை அவர் நீக்கி விட்டார். அந்த தருணத்தில், நரேந்திர மோடி போன்ற வலிமையான மன உறுதி கொண்ட ஒரு தலைவர் நாட்டை வழிநடத்தினால் முடியாதது எதுவும் இல்லை என்பதை நாட்டு மக்கள் உணர்ந்து கொண்டனர்’ என்றும் கூறினார்.


Next Story