மேற்கு வங்காள படுகொலை; 3வது நாளாக வெடிகுண்டுகளை கைப்பற்றி போலீசார் விசாரணை
மேற்கு வங்காளத்தில் 8 பேர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பின் இன்று 3வது நாளாக வெடிகுண்டுகளை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.
பீர்பும்,
மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பாது ஷேய்க் என்பவர் மார்ச் 21ந்தேதி அன்று படுகொலை செய்யப்பட்டார். இதனையடுத்து, இவரது கொலை காரணமாக அவரது சொந்த ஊரான பீர்பூம் மாவட்டம் ராம்புராட் நகரில் போக்டுய் கிராமத்தில் ஏற்பட்ட வன்முறையில், கடந்த 24ந்தேதி அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் பல வீடுகளுக்கு தீ வைத்தனர். அதில் 8 பேர் உயிருடன் எரித்து கொல்லப்பட்டனர்.
இந்த வன்முறை சம்பவம், மேற்கு வங்காள மாநிலம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினருக்கு எதிராக பா.ஜ.க. போராட்டம் நடத்தி வருகிறது.
இந்த நிலையில், பீர்பூம் வன்முறை சம்பவம் தொடர்பாக கொல்கத்தா ஐகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது. சாட்சிகள் பாதுகாக்கப்படுவதையும், அப்பகுதியில் ஆதாரங்கள் பாதுகாக்கப்படுவதையும் உறுதி செய்யுமாறும், 24x7 கண்காணிப்பிற்காக சி.சி.டி.வி கேமராக்களை பொருத்துமாறும் மேற்கு வங்காள மாநில அரசுக்கு நேற்று முன்தினம் ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
இந்த நிலையில் 8 பேர் தீ வைத்து எரித்து கொல்லப்பட்டது தொடர்பான வழக்கை சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வந்த நிலையில், வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மேலும் விசாரணை அறிக்கையை ஏப்ரல் 7ந்தேதிக்குள் தாக்கல் செய்யவும் சி.பி.ஐ.க்கு உத்தரவிட்டுள்ளது.
இந்த சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள் 40 நாட்டு வெடிகுண்டுகளை போலீசார் நேற்று பறிமுதல் செய்துள்ளனர். பீர்பும் நகரில் மார்கிரம் கிராமத்தில் கட்டுமான பணி நடந்து வந்த வீடு ஒன்றில் 4 வாளிகள் இருந்துள்ளன. அவற்றுள் 40 நாட்டு வெடிகுண்டுகள் மறைத்து வைக்கப்பட்டு உள்ளன. இதனை கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோன்று, நேற்று முன்தினமும் அதே பகுதியில் 5 வாளிகளில் நாட்டு வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டன. இதன்பின்பு அவற்றை மணல் மற்றும் நீர் கொண்டு நிரப்பி செயலிழக்க செய்தனர். இந்த நிலையில், பீர்பும் மாவட்டத்தின் சிக்கந்தர்பூர் கிராமத்தில் கால்பந்து மைதானம் அருகே பிளாஸ்டிக் பை ஒன்றில் நாட்டு வெடிகுண்டுகள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது இன்று கண்டறியப்பட்டது. இதனை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வெடிகுண்டுகளை செயலிழக்க செய்வதற்காக சி.ஐ.டி.யின் வெடிகுண்டு நிபுணர் குழுவுக்கு தகவல் அளிக்கப்பட்டு உள்ளது.
தொடர்ந்து 3வது நாளாக வெடிகுண்டுகளை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வரும் சூழலில், அந்த பகுதி பரபரப்புடன் காணப்படுகிறது.
Related Tags :
Next Story