அரசு அலுவலகங்கள் வாரத்தில் 5 நாள்கள் மட்டுமே செயல்படும்: மணிப்பூர் அரசு அறிவிப்பு
அரசு அலுவலகங்கள் வாரத்தில் 5 நாள்கள் மட்டுமே செயல்படும் என்று மணிப்பூர் முதல்-மந்திரி பைரேன் சிங் அறிவித்துள்ளார்.
இம்பால்,
மணிப்பூர் மாநிலத்தில் 2 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடந்தது. மார்ச் 10ஆம் தேதி ஓட்டுக்கள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. மாநிலத்தில் உள்ள 60 தொகுதிகளில் பாஜக 32 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மை பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்ததது. இதன்படி பைரேன் சிங் மீண்டும் முதல்-மந்திரியாக பொறுப்பேற்றார். இதனைத்தொடர்ந்து அவர் தொடர்ந்து பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகிறார்.
இந்நிலையில் மார்ச் 22ஆம் தேதி முதல்-மந்திரி பைரேன் சிங் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மாநிலத்தில் அரசு அலுவலகங்களின் நேரத்தை மாற்றியமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும் வாரத்தில் 5 நாட்கள் மட்டும் அரசு அலுவலகங்கள் செயல்படவும், 2 நாள் விடுமுறை அளிக்கவும் முடிவு செய்யப்பட்டது.
இதுதொடர்பாக தற்போது மணிப்பூர் அரசின் துணைச் செயலர் சுனந்தா தோக்சோம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், மாநிலத்தில் அனைத்து அரசு துறை நிறுவனங்கள், அலுவலகங்கள் வாரத்தில் 5 நாட்கள் மட்டும் இயங்கும். அதன்படி கோடைக்காலமான மார்ச் முதல் அக்டோபர் மாதம் வரை காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரையும், குளிர்காலமான நவம்பர் முதல் பிப்ரவரி வரை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையும் அலுவலகம் செயல்படும். 2 நடைமுறையிலும் மதிய உணவு இடைவேளை 1 முதல் 1.30 மணிக்குள் முடிக்க வேண்டும். இந்த அறிவிப்பு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
பள்ளிகளை பொறுத்தமட்டில் அரசு, தனியார், அரசு உதவி பெறும் பள்ளிகளை காலை 8 மணிக்கு துவக்கலாம். இதுதவிர நேரத்தை பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் மாற்றம் செய்து வழங்கலாம்'' என அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story