நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் போராட்டம்:பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு


Image Courtesy:  ANI
x
Image Courtesy: ANI
தினத்தந்தி 28 March 2022 10:46 AM IST (Updated: 28 March 2022 12:35 PM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசைக் கண்டித்து நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் நடத்தும் இரண்டு நாள் பொது வேலைநிறுத்தம் இன்று தொடங்கியது.

புதுடெல்லி,

மத்திய அரசின் பொருளாதார கொள்கைகள், தொழிலாளர் விரோத திட்டங்களுக்கு எதிராக தொழிற்சங்கங்கள் போராடி வருகின்றன.

குறிப்பாக தொழிலாளர் குறியீடு, தேசிய பணமாக்கல் திட்டம், தனியார்மயம் போன்றவற்றை கைவிடுதல், தேசிய ஊரக வேலை உறுதி திட்ட ஊதிய உயர்வு, ஒப்பந்த தொழிலாளர்களை முறைப்படுத்துதல் உள்ளிட்ட12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றன.

இந்த கோரிக்கைகளை வென்றெடுக்கும் நோக்கில் இன்றும் (திங்கட்கிழமை), நாளையும் நாடு முழுவதும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட இந்த தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.

சி.ஐ.டி.யு., ஐ.என்.டி.யு.சி., எச்.எம்.எஸ்., ஏ.ஐ.டி.யு.சி., எல்.பி.எப். உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் இணைந்த அகில இந்திய தொழிற்சங்க கூட்டமைப்பு இந்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த வேலை நிறுத்தத்துக்கு பல்வேறு தனித்தனி தொழிற்சங்கங்களும் ஆதரவு தெரிவித்து உள்ளன.

இந்த அழைப்பை ஏற்று பல்வேறு அரசு துறைகளை சேர்ந்த தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த நோட்டீஸ் வழங்கியுள்ளன.

நிலக்கரி, ஸ்டீல், எண்ணெய், தொலைதொடர்பு, தபால், வருமான வரித்துறை, செம்புத்துறை, வங்கிகள், மின்சாரம், காப்பீடு என பல்வேறு துறைகளில் செயல்பட்டு வரும் தொழிலாளர் அமைப்புகள் இந்த நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் பங்கேற்பதாக அறிவித்து உள்ளன.

நெடுஞ்சாலைகள், போக்குவரத்து, மின்சாரம் போன்ற துறைகளின் தொழிலாளர்களும் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

அந்த வகையில் இன்று காலை 6 மணி முதல் 30-ந் தேதி காலை 6 மணி வரை நடைபெறும் இந்த 2 நாள் வேலை நிறுத்தத்தில் நாடு முழுவதும் 20 கோடிக்கும் அதிகமான அமைப்பு சார்ந்த மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தநிலையில்,  நாட்டின் பல மாநிலங்களிலும் இன்று வேலை நிறுத்தம் தொடங்கியது. குறிப்பாக எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் வேலை நிறுத்தம் நடந்து வருகிறது. சில இடங்களில் பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

வேலைநிறுத்தம் காரணமாக தமிழகம் முழுவதும் குறைந்த அளவே பஸ்கள் இயக்கப்படுகின்றன. 

சென்னையில் மின்சார ரெயில்கள் இயக்கப்படுவதால் அதில் பயணிக்க பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. சென்னையில் பல இடங்களில் இன்று ஆர்ப்பாட்டம், சாலை மறியலில் தொழிற்சங்கங்கள் போரத்தில் ஈடுபட்டுள்ளனர். 

மேற்குவங்காளம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. சில மாநிலங்களில் ரெயில் மறியல் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. 

வங்கி சேவை பாதிக்கும் வங்கி ஊழியர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதால் இன்றும் நாளையும் வங்கி பணிகள் பாதிக்கப்படும் எனத் தெரிகிறது.

Next Story