மேற்கு வங்க சட்டசபையில் இருந்து பாஜக எம்.எல்.ஏக்கள் 5 பேர் சஸ்பெண்ட்


Image Courtesy:  INDIA TODAY
x
Image Courtesy: INDIA TODAY
தினத்தந்தி 28 March 2022 9:54 AM GMT (Updated: 28 March 2022 9:54 AM GMT)

மேற்கு வங்க சட்டசபையில் இருந்து சுவேந்து அதிகாரி உட்பட 5 பாஜக எம்.எல்.ஏக்கள் மறு அறிவிப்பு வரும் வரை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.

கொல்கத்தா,

மேற்கு வங்கம் மாநிலம் பிர்பூமில் நடந்த வன்முறையில் 8  பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐ., விசாரித்து வருகிறது. இந்த விவகாரத்தால் மேற்குவங்க சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று கடும் அமளி ஏற்பட்டது. பிர்பூம் வன்முறை தொடர்பாக விவாதிக்க பாஜக உறுப்பினர்கள் கோரியதாக கூறப்படுகிறது.

இதற்கு திரிணமுல் காங்., எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் ஏற்பட்ட வாக்குவாதம், கைகலப்பாக மாறியது. இந்த மோதலில் பாஜக  எம்எல்ஏ மனோஜ் திக்கா தாக்கப்பட்டார். இரு கட்சியினருக்கு இடையே பெரும் அமளி ஏற்பட்டதால், சட்டசபை அரங்கே அதிர்ந்தது. இதையடுத்து பாஜக எம்எல்ஏ.,க்கள் வெளிநடப்பு செய்து, சட்டசபை முன்பு கோஷம் எழுப்பி போராட்டம் நடத்தினர்.

சட்டசபையில் அமளியில் ஈடுபட்டதாக பாஜக எம்எல்ஏ.,க்களான சுவேந்து அதிகாரி, மனோஜ் திக்கா, ஷங்கர் கோஷ், தீபக் பர்மன், நர்ஹரி மஹதோ ஆகிய 5 பேரும் மறு அறிவிப்பு வரும் வரை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார். 

இது தொடர்பாக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி கூறியதாவது: 

கூட்டத்தொடரின் கடைசி நாளிலாவது சட்டம் - ஒழுங்கு குறித்து விவாதம் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தோம். ஆனால் ஆளும் கட்சி அரசு மறுத்துவிட்டது. எங்களது எம்எல்ஏ.,க்களுடன் சண்டையிடுவதற்காக கொல்கத்தா  போலீசாரை பாதுகாப்பு அதிகாரிகளின் உடையில் அழைத்து வந்துள்ளனர். இதை எதிர்த்து பேரணி நடத்துவோம். விதிகளின்படி நடவடிக்கை எடுக்கக் கோரி, சபாநாயகருக்கு எனது புகாரை அளிப்பேன். இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும். 

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story